ஆட்டுக்குட்டியும் நானும்
விரிசல்விட்ட சுவற்றில் கரிசல்காட்டுப்பூவாய் நான்...
நெரிசல் மிகுந்த மாய உலகின் தாபம் கண்டு
பரிசல் ஏறி பட்டிக்காடு வந்தேன்….பரிவைத்தேடி.
தரிசாய்ப் போன தரையில்..தயவும் இல்லை பரிவும் இல்லை.
குரிசில் போலொரு குட்டி ஆட்டிடம் தானே கண்டேன் கனிவை .
கரிசனம் மிகவே கண்ணைச் சிமிட்டி கேளாய் குழந்தாய் உன் கேள்வி - இறை
தரிசனம் பெற்ற முதுபெரும் ஞானியாய் என் மனக்கேள்வியினை கேட்டதுவே.
சரிசமமாய் ஒரு நொடியினிலே ஒரு சக உதிரம் ஜனித்ததுவே.
புத்தர் உன்னை தனதாக்கி மொத்தம் தானே சுமைதூக்கி
சித்தம் தெளிய சில விஷம் குறைய ஞான ஒளியை
நித்தம் நித்தம் போதித்தாரே .சத்தமின்றி அச்சமென்னும் அசடை அகற்றி
கத்தை கத்தை கனிமொழி கேட்டு பித்தம் முழுதும் பிணக்கென தள்ளி
புத்தம் கையில் நித்தம் பூக்கும் மலரென நீ மகிழா மடமைக் கண்டு
சத்தம் போட்டா உன் உயிர் காப்பேன் ..சற்றே கனிவாய் என் குரல் நடுங்க …
கத்த கத்த..கருப்பணசாமிக்கு ..அலற அலற ..அய்யனார் சாமிக்கு
மொத்த இனத்தை காவென்று கரைக்க..நீங்கா நோவோன்றிருக்கு.
கருத்தரவர் கருணாசாகரம், நீ பொருத்தமிலா பலியாதல் கண்டு
வருத்தமிக கொண்டேதான் மார்மேலும் தோள்மேலும்
விருப்பமுடன் வீற்றிருக்கச் செய்திட்டாரோ? மலை மீது ஏறி நின்று
கருத்துக்கள் கடலெனவே கசிந்திட்டாரே..கற்றனையோ..என்ன பெற்றனையோ?
பொருத்தி பொருத்தி பூவுலகின் பெருமகனார்..பயமகற்றி உன் அறியாமை
இருளகற்ற இத்தனையும் செய்திட்டார்...இன்னும் நீ இவ்வுலகில் ஓர்
பொருட்டாக படவில்லை அறிவீனத்திற்கோர் ஆட்டு மூளை என்றேதான்
பெருங்கால சொலவடையாய் சொல் ஒன்றுண்டு நீ அறிவாயோ?
ஆநிரை மேய்த்தான் ஆனந்தக் குழலூதி.
‘ஆ’ குறை தீர்த்தான் -.உன்னினத்தை
ஆதூரமாய் அணைத்தான் ஆட்டிடையன் ஆனந்தக் கண்ணன்.
மா நிறை மாதவன்...கையொடு சங்கோடு சக்கரமாய்
மாதவம் பெற்றிருப்பாய் என்றெண்ணினேன் ..
மா வதைபட்டு ..மண்ணில் சாயும் மாயமென்ன?
பாசுரங்களுக்கு பாட்டுடைத்தலைவன் வாசுதேவன் ஆயனவன்
பாசமுடன் அவன் மடி கிடந்தாயே ?
எத்தனை பேர் வந்தாலும் ...உலகிலுள்ள அத்தனை பேர் வந்தாலும்
ஞான ஒளியின் வடிவாக உலகிலுள்ள அத்தனை பேர் வந்தாலும்
தன்னுள்ளே தான் புகுந்து...தன் கசடை நன்கறிந்து ..களை அகற்றி
விண் புகும் விஞ்ஞானம் மெய் ஞானவிளக்கோடு வெளிச்செல்ல
வேண்டுமம்மா..உட்புகுந்து களை களைந்து..வெளிச்செல்ல
புத்தமும் கர்த்தரும் கண்ணனும் சொக்கனும் மொத்தமும் ஒன்றே தான்
புத்தியில் உரைத்திடும்...நெற்றியில் தெறித்திடும்...வெண்பனி
சித்தராய் குட்டி ஆடு கூறி முடித்தது.
No comments:
Post a Comment