நிலா முற்றம் ( 14-12-2016)
அடுப்பு ....
அடுப்பும் துடுப்பும் அம்மாவின்
உடுக்கையாய் உடற்பாகமாய்
மிடுக்காய் பல நேரம்
கடுப்பாய் சில நேரம் ...
கடுப்பாவதால் சட்டென
விடுப்பெடுத்திடாள் …..- அகிலத்தின்
துடிப்பை தன் அன்னத்தால்
நடக்கச் செய்திடும் நல்லாள் - நோய்
மடித்து போட்டாலும் - மனம்
அடித்துக் கொள்ளும் - கொஞ்சம்
குடிக்க கூழேனும் செய்திட்டால்
குடும்ப நலம் சிறக்குமே
சடைக்காமல் சுற்றம் பேணுவாள்
சிடுக்கு பிடித்த பணியென - சில நொடி
வெடுக்கென மனம் வெம்பினாலும் - தன்
தடக்கை தாண்டி தளிகை
கடக்க இடம் கொடாள் ….
அடுப்பைத் தாண்டி அனைத்தும்
அறிவாள் அகிலத்தில்
அடுப்பை கண்டால் அனைத்தும்
மறப்பாள் ..அன்பை அன்னமாக்கி
சிறப்பாள் சிற்றுயிர் காத்து
துறப்பாள் தன் இன்பங்கள்
நிறைப்பாள் பல உள்ளங்கள்
பரபரப்பாய் உண்டிகள் ஆக்கி
வரிப்பாள் அன்னபூரணி வேடம்
சிரிப்பாள் அது சாகம்பரி சாயல்
அண்டத்தில் பேரடுப்பு ஒன்றுண்டு
பிண்டத்தில் உந்தியெனும் வயிரதுவே
பண்டத்தை பதமாக்கி - நல்
கண்டத்தின் வழி ஊட்டி - வேள்வி
குண்டத்தில் உயிர் வளர்ப்பாள்
No comments:
Post a Comment