கட்டி வெண்ணை காஸ்கோவில் வாங்கி
குட்டி கிண்ணத்திலிட்டு காய்ச்ச - வெண்ணை
உருகி ஓட ..உடனே கிடைக்காத
முருங்கைக் கீரைக்கு ஏங்கி
கருவேப்பிலை கொத்தொன்றை
மோருடன் திளைக்கச் செய்து
விரைந்து உருகிய வெண்ணெயுடன்
கரைந்த நிமிடங்கள் காத்து - நெய்
விருந்தாய் மணம் வீட்டை நிறைக்க
பொருமி பொங்கி வரும் திரவத்தில்
உருவிய கருவேப்பிலை களமிறங்க
படபடவென வெடித்து
சடசடக்கும் சத்தமது
காட்டுக்கோழி பேடையெழுப்பும்
ஒலியென கிளம்பி
மெல்ல அடங்கும் என
சொல்லிய சேதி
சங்க இலக்கிய
சங்கதியாய் எப்போதோ
எங்கோ படித்ததாய் நினைவு ..
காஸ்கோ வெண்ணை கிண்ணத்தில்
காட்டுக்கோழி எண்ணத்தில் ..