கலைந்த தலை
கிழிந்த உடை
மழிக்காத தாடி என
பழிக்கும் உறவே - என்
செழிப்பான தோற்றம் காண
விழிப்பாய் ஒன்று செய்வீர் - அவள்
விழியில் எனைத்
தொலைத்தேனே - ஏது
விலை கொடுத்தேனும்
கலையழகு கண்மணியை தருவீரோ ?
கத்திரி வெயிலில் காயும் பாறையில்
பத்திரமாய் வைத்த வெண்ணை
உருகி ஓடிப் ..பெருக... காத்து
நிறுத்திட வழியின்றி
பருத்த கையிரண்டையும் இழந்து
சிறுத்த வாயும் பேச முடியாதவன்
இருவிழியால் வெண்ணை காத்தவன்
வருத்தமாகி நின்ற கதையாய்
கருத்தை கவர்ந்தவள்
உருவம் காணாது ..
கலைந்த தலையாய்
கிழிந்த உடையாய்
இடிக்கும் கேளிர்! எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடலை அடிப்படையாக கொண்டது. எழுதியவர் : வெள்ளிவீதியார்
சூழல்: காதலனின் பிரிவு நோயைப் பாங்கன் கண்டிக்க, அவனுக்குக் காதலன் சொல்வது
நான் செய்வது தவறு என்று கண்டிக்கும் சுற்றமே ,
வெப்பத்தால் கொதிக்கும் பாறையில் வைத்த வெண்ணெயை கை இல்லாத, வாய் பேச முடியாத ஊமைஒருவன் அதைக் கண்ணால் காவல் காக்கிறான். வெண்ணென் அவன் கண்ணெதிரேஉருகியும் அவனால் எதுவும் செய்ய இயலுவதில்லை. (வேதனையோடு அதை வெறுமனேபார்த்துக்கொண்டிருக்கிறான்.)அதுபோல, இந்த பிரிவு எனக்குள் பரவியுள்ளது. இதைப் பொறுத்துக்கொள்ளஇயலாமல் நான் தவிக்கிறேன்!
உங்களால் முடிந்தால் என்னுடைய பிரிவு நோயைத் தடுத்து நிறுத்துங்கள்.
குறுந்தொகை 058
இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல.
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல்போலப்
பரந்தன்று இந் நோய், நோன்றுகொளற்கு அரிதே!
திணை: குறிஞ்சி
என்.சொக்கன் ( பொழிப்புரை)
No comments:
Post a Comment