அழகு மிளிர்த் தடாகம்
அல்லி மலர் கூட்டமல்ல
அங்குமிங்கும் தள்ளி தள்ளி
அசைவற்ற ஆனந்தம் அருந்தி
அதனிடையே ஊறும் நிலவு
அமைதியான அடர்ந்த ஆலம்
அடர் இருளை விரித்துக் காட்ட
அசலன நீர் பரப்பில்
அசைவில்லா நிலவதுவும்
அமைந்தவொரு ஆடியென
அடிபட்ட வடு தடவி
அழிந்துவிட்ட முகப்பூச்சு சமன் செய்ய
அந்த நொடி மோனத்தில்
அகிலம் எல்லாம் அமிழ்ந்திருக்க
கடும் கோட்டான்
திடும் மென கல்லெறிய
கலங்கியதோர் கணத்தினிலே
முழுநிலவும் முழித்துச் சிதறி
முகம் தெளித்த நீர்
துடைக்க .முக்காடு துணியாக
முகில் ஒன்றை பற்றியிழுக்க
வெட்டியது மின்னலொன்று
தடாகத்து தவளைகளும்
படாடோபக் கச்சேரி துவக்க
மௌனம் கலைத்த காடு
மழைக்கு இசைக் கூட்டியது...
#மீமொழி முயற்சியில் ..
கிரியா ஊக்கிகளான தோழிகள் ரத்னா
மற்றும் மதுராவிற்கு நன்றி