Thursday, July 23, 2020

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில் 

சரிந்த மலை 
விரிந்த இலை 
செழித்த வாழை 
பழுத்த குலை 
பாரம் தாங்காது 
ஓரமாய் சாய்ந்து 
விழுந்து சிதறியது 
குழம்பிய சுனையில் 


தேனாய் இனிக்கும் 
வீணான பலாவும் 
பாறையில் மோதி 
வேறாய் சுளைகள் 
வாழையின் மீது 
வீழ்ந்து கலந்து 
நாள்பட ஊறி 
நீள்சுனை நீரோ 
பால் போல் 
தேறலாய் தெளிய 


ஆண் குரங்கொன்று 
தேன்சுவை நீரை 
திகட்ட திகட்ட வாயில் 
புகட்டி அருந்திட 
அகமெலாம் திளைத்து 
புகவில்லை புறத்தே 
மிளகுக்கொடி மேலேறிய 
அழகு சந்தனமரம் தேடவில்லை
மனதை மயக்கும் பூமணம் 
சதிராடும் மலைச் சாரலிலே 
தூக்கம் கண்ணை 
தூக்கிச் செல்ல 
உருண்டு உறங்கும் குரங்கினம் 
உரு பலவுடைய விலங்குக்கூட்டம் 
அலைந்து திரியாது அரிய இன்பம் 
மலையில் கிடைக்கும் 
நிலைத்த மலை நாடா..

எண்ணாத இன்பங்கள் 
எண்ணிறந்து பெறும் உனக்கு 
எண்ணிய முடிப்பதென்ன அரிதா?
மன்னா நீ செப்பிடுவாய்..

இணையில்லா இளமயிலாள் 
பணைத்தோள்கள் தடுத்தாலும் 
பாவிமகள் மனம் உன்னை 
மேவி வந்து தாவிடுதே!

தாவும் நெஞ்சை தடுத்து விட 
காவலுக்கு கரையிட்டு 
தந்தையவர் தாழ் போட
சிந்தையிலே சிறை தப்ப 
ஒற்றரையும் ஓரங்கட்ட 
சிற்றிடையாள் எண்ணி பல 
திட்டங்கள் தீட்டிடத்தான் 
வேண்டுமென்றோ?  
ஏன் என்று எண்ணிடாயோ?

பட்டப்பகல் தன்னில் கண்ணில் 
பட்டிடக் கூடுமோ இனி?
நட்டநடு இரவும் போய்  யாமமது  
விட்டவோர் வழியாகுமன்றோ?

வேங்கைமரக் கிளையெல்லாம் 
தாங்கி நிற்கும் வாசமலர் 
எங்கெங்கும் புதராக 
இங்கு பசுமை கண்டிலையோ?

வெள்ளை வெளிச்சமாக  வெகுநேரம் 
நில்லாது ஓடும் நிலவும் 
சொல்லவில்லையோ கதைகள் பல..

எளிமையாக்கம்: ராஜி_வாஞ்சி 


பாடியவர்: கபிலர்
திணை : குறிஞ்சித் திணை


மூலப்பாடல் அகநானூறு#2


#2 குறிஞ்சி கபிலர்
கோழ் இலை வாழை கோள் முதிர் பெரும் குலை
ஊழ்_உறு தீம் கனி உண்ணுநர் தடுத்த
சாரல் பலவின் சுளையொடு ஊழ் படு
பாறை நெடும் சுனை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது   5
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம் எளிதின் நின் மலை
பல் வேறு விலங்கும் எய்தும் நாட
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய  10
வெறுத்த ஏஎர் வேய் புரை பணை தோள்
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்_மாட்டு
இவளும் இனையள் ஆயின் தந்தை
அரும் கடி காவலர் சோர்_பதன் ஒற்றி
கங்குல் வருதலும் உரியை பைம் புதல்  15
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே
நன்றி: sangacholai.in

அகம்400#2 - நகரும் நிலா ( கதை)

#அகம்400#2
#கதை#2

நகரும் நிலா 

முகில்  முகில்   என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த மாதவி..வார இறுதியின் கடைசி சொட்டு தூக்கத்தை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருந்தவனை பார்த்து “ உனக்கு எல்லாமே நினைக்கறதுக்கு முன்னாடி கிடைச்சுருது அதுனால சொகுசா நீ தூங்குற “ என்றவாறே அருகில் இருந்த தலையணை அவன் மேல் எறிந்தாள். 

திடுக்கிட்டு எழுந்த முகில் ..’என்னாச்சு இன்னிக்கி என்ன கூத்தடிக்கப் போற ..என்ன சொல்லி அனுப்பியிருக்கா என் வருங்கால மனைவி என்று சிரித்தான். 

‘ கூத்தா ..நிஜமாவே கூத்து தான்  நீ மொதல்ல போயி பல் விளக்கிட்டு உங்கம்மா கிட்ட உனக்கும் எனக்கும் காபி வாங்கிட்டு வா ..டிசம்பர் குளிர்ல பனி கொட்டி கிடக்குன்னு பார்க்காம உனக்காக 40 மைல் கார் ஓட்டிட்டு வந்திருக்கேன் ..மொதல்ல காபி அப்புறம் தூது செய்தி .என்றாள். 

ஆவி பறக்கும் காபியுடன் எதிரில் நின்ற முகில் ஆவலாக மாதவியின் முகத்தை பார்த்தான். தன்னுயிர் காதலி பூவையின் தோழி மாதவி. இருவருக்கும் மிகுந்த நம்பிக்கையான தூதும் அவளே. தொழில் நுட்பமே தூதாக இருக்கும் நவீன உலகில் இன்னும் சில நுண்ணிய உணர்வுகளுக்கு இந்த மாதிரி தோழமைகள் தூதாக போவது நடக்கிறது என்பதற்கு சான்று தான் மாதவி. 

பூவையின் அம்மாவின்  வீடு மிகுந்த செல்வம் உடையது. அப்பாவின் குடும்பமோ மிக பெரியது செல்வாக்கும் கட்டுக்கோப்பும் உடையது. 

முகில் பொறுமையிழந்து மாதவியை பார்த்தான். அவளோ, கையிலிருந்த காபியை ரசித்து குடித்துக் கொண்டே ,’’கூத்துன்னு சொன்னியா நேத்து நான் கூத்துப்பட்டறை நடத்திய கூத்து ஒன்னு பார்த்தேன் அதை மொதல்ல கேளு ..என்றாள் “ நீ பூவை என்ன சொல்லி அனுப்பினான்னு சொல்லிட்டு கூத்துப்பட்டறை பற்றி பேசேன் “பரிதாபமாக கெஞ்சினான் முகில். 

“நான் சொல்ல வந்த விஷயமே அதுல தான இருக்கு கேளு “என்று தொடர்ந்தாள் மாதவி. 

ஒரு பெரிய்ய்ய மலை அதுல அகல நீளமா செழிப்பா வளர்ந்த வாழையிலையோட வாழைமரம் குலை தள்ளி நிக்குது..அது நிக்கிறது மலை சரிவில, குலையோட பாரம் தாங்காம தொபுக்கடீர்னு வாழைத்தாரு கீழ விழுந்துருச்சு ..விழுந்தது தரையில விழுகாம பக்கத்துல இருந்த சுனையில விழுந்துருச்சு ..அது விழுந்த மாதிரியே பக்கத்துல இருந்த பலாமரத்துலேருந்து பலாப்பழமும் மலையில விழுந்து பலாச்சுளை எல்லாம் தெறிச்சு வாழைப்பழத்து மேல விழுந்துருச்சு ...அப்படியே இரண்டும் ஊறி கிட்டே இருந்ததுல அந்த சுனையில இருந்த தண்ணி இனிப்பா மாறி கொஞ்ச நாளில லேசாக புளிக்க ஆரம்பிச்சு தெளிஞ்சு போய் கிடந்துச்சாம்..

இவ எங்கேருந்து எங்க கதை சொல்றா என்ன சொல்றான்னு புரியவில்லை என்றாலும் பொறுமையாக இருந்தான் முகில். நடுவில் புகுந்தால் வேண்டுமென்றே புதுக்கதை ஆரம்பிப்பது போக்கு காட்டுவாள் என்பதால் ரொம்ப ஆர்வமாய் கேட்பது போல் உட்கார்ந்திருந்தான். 

சுனைத்தண்ணி தெளிவா இனிப்பும் புளிப்பும் கலந்து அருமையான மலை கள்ளு மாதிரி இருக்குதா ..அப்போ அங்க ஒரு குரங்கு தாகமா வருது. சாதாரண தண்ணின்னு நினைச்சு குடிச்சுது..ஆனால் ஊறின தேறல் சுவையில் மயங்கி போய் பக்கத்துல புதர் மாதிரி மண்டியிருந்த பூச்செடியில புரண்டு விழுந்து அப்படியே தூங்கிருச்சு. பக்கத்துல நிக்குற வளர்ந்த சந்தன மரத்தையும் பார்க்கல அதுல இருக்கிற மிளகுக் கொடியையும் பாக்கல ..” என்று மூச்சு விடாமல் பேசிய மாதவி..மூசசு விட நிறுத்திய நொடியில் முகில் கிடைத்த இடைவெளியில் பேசினால் தான் உண்டு என்று 

“அப்ப  என்னை குரங்குன்னு சொல்ற ..
நீ வர்றப்ப நான் தூங்கிட்டு வேற இருந்தேனா உனக்கு சந்தேகமேயில்லை அதுல என்று சிரித்தான். 

காபி கோப்பையை அருகில் வைத்து விட்டு நிமிர்ந்த மாதவி.’இதெல்லாம் சொல்லு ..ஆனா அங்க பூவை படுற பாடு மட்டும் என்னன்னு நினைச்சு பாக்காத குரங்குக்கு மட்டுமா எல்லாம் எளிதா கிடைச்சது ..அந்த காட்டோட வளம் அப்படி எல்லா விலங்குகளும் அப்படித் தான் சுத்தி திரியுது...கஷ்டப்படாம காலம் தள்ளுது ..அலையாம கொள்ளாம நினைச்சதை விட அதிகமா கிடைச்சா எப்படி அருமை தெரியுங்கிறேன் ..” மீண்டும் கதைக் களத்தை சுற்றியவள்..

‘இப்போ நேரிடையான சொல்றேன் கேட்டுக்கோ ..நீ நினைச்சுக்க கூட பார்க்காதது எல்லாம் இவ்வளவு எளிதா கிடைக்கிறப்ப ...நீ  நினச்சு நினச்சு வேணும்னு நினைக்கற ஒன்னை அடையறது அப்படி என்ன முடியாத காரியமா உனக்கு?’ 

அவ அதுக்கு மேல உன்னையே நினைச்சு நினைச்சு மருகுறா...அறிவும் புத்தியும் உன்னை நினைக்காதன்னு சொன்னாலும் அதையெல்லாம்  கேக்குற நிலையில இல்லை அவ மனசு. இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்? 

கண்முன்னே காட்சிகள் விரிய ..இருவரும் சந்தித்த நாள் மனதில் ஓடியது...முகிலுக்கு..


முகிலின் மனத்தை படித்தது போல் 
“இனிமே அந்த கதையெல்லாம் முடியாது தம்பி..அங்க ..அவங்க அப்பா காதுக்கு உங்க சங்கதியெல்லாம் போயிருச்சு...அவரை தெரியமில்ல ..ஊருக்குள்ள பெரிய தல ..” என்றாள் மாதவி..

அதிர்ச்சியில் உற்சாகம் வடிந்து ..கவலை ரேகைகள் முகிலின் முகத்தில் தென்படத் தொடங்கியது. “அவருக்கு எப்படி..அதுக்குள்ள..எப்படி ..” என்று சொல்லி முடிக்க முடியாமல் சொல் தேடி அலைந்தான்…

“ ஆ….அதெல்லாம் ..அப்படி தான்..நீ ..உன்னை சுத்தி என்ன நடக்குது ..பாக்க மாட்டியா? ..விசாரிக்க மாட்டியா..? ஊருக்குள்ள நாலா பக்கமும் காவலுக்கு ஆளு ..துப்பு சொல்ல ஆளுன்னு போட்டு வச்சிருக்காரு….அவங்களுக்கு எப்படி கடுக்கா கொடுக்கிறதுன்னு இவ கிடந்து தடுமாறி கிட்டு கிடக்கா …..இனிமே பகல் நேரத்துல வெளிய வர்றதே முடியாது ….நட்டநடு ராத்திரியில கூட சொல்ல முடியாது ..ஊரு மொத்தம் தூங்குற ஜாமத்துல தான் வர முடியும் ..”

மாதவியின் பக்கம் பார்க்காமல் கண்ணில் தளும்பிய நீரை மறைக்க 
சுவரில் மாட்டியிருந்த படத்தையும் அதில் இருந்த நிலவையும் வைத்த கண்ணை எடுக்காமல்  பார்த்துக் கொண்டிருந்தான் முகில்.

மாதவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. குரலில் மென்மையை வலிந்து ஏற்றுக் கொண்டு…” சரி ..விடு நீ மீதி கதையை கேளு..என்று திசை திருப்பினாள். கூத்துப் பட்டறையே ..கும்முனு சத்தமேயில்லாம பனி கொட்டுற ராத்திரி மாதிரி அமைதியாய் இருந்தது..உருக்கமான குரலில் தோழி கதாப்பாத்திரத்தின் குரல் ஒலித்தது..

” நீ காட்டுப்பக்கம் போய் பார்த்தியா..? புதரா மண்டி கிடக்குற வேங்கைப் பூ வாசமும் ..பச்சை பசேல்ன்னு காடு மாறி கெடக்கறதையும் பாத்து என்ன நடக்குதுன்னு உனக்கு புரியலையா.....நிலா...எந்நேரமும் ..விடாம வானத்துல காஞ்சிட்டு இருக்கே..அதை சுத்தி கோட்டை கட்டிக்கிட்டு எந்நேரம் வேணா மழை வருமனு தோணலையா ன்னு கூத்துல கேள்வி மேல கேள்வியா கேக்க கேக்க பூவை அங்க உட்கார முடியாம அழுதுட்டு எழுந்துருச்சு உள்ளாற ஓடிட்டா ..அதையெல்லாம் பாத்ததுக்கு அப்புறம் மனசு கேக்காம தான் இந்த குளிர்லயும் பனியிலயும்  நான் உன்னை பாக்க இவ்வளவு தூரம் வந்தேன்...என்று மாதவி பேசுவதை கேட்க முகிலின் மனம் அங்கே எங்கு இருக்கிறது?..


பாடியவர்: கபிலர்
திணை : குறிஞ்சித் திணை

அகம்400 #1 கவிதை

அகம்#1

#காரோடன் 

வண்டுகள் சிதைத்த  
வண்ணமலர் மாலைகள் 
தன்னுயர் உச்சியில் முடிந்து 

மின்னியொளிரும் கழலை*யணிந்து  
மின்னலாய் விரையும் பரிமேலேறிய  
மழவர்தம் சதியை நற்போர் செய்த 
முருகனைப்  போல நெடுவேள் ஆவியும்** 
முறித்திடுவானே 

வேலையுடைய  வேளிர்த்தலைவன் 
வியனுறு வீரமும்   செறிவுடன் 
பயனுறு மலையில் 
திருத்திய தந்தக்களிறுகள்
பொருந்திய பொதினி மலையினிலே 

சீர்மிகு சிறு காரோடன்***
நேர்பட  தீட்டிடுவான் 
கூர்வேலும் அம்பும் வாளும் 
சாணை தீட்டும் கல்லாலே 
மானே நீயும் அறிவாயோ  ?


தீட்டும் கல்லுடன் 
கூட்டாய் அரக்கை****
சேர்த்து  இணைத்து
கோர்த்து வைத்து  
கல்லும் அச்சும் விலகிச் 
செல்லும் அச்சம் தவிர்த்து  
ஈர்த்து நின்று பிரியா 
தென்றும்  செவ்வன 
நன்றாய் சிறப்பது போல 
ஒன்றாய் இருப்போம் 
என்றே வாக்கினைத் தந்த 
என்றன் தலைவன் 
இன்று அதனை மறந்தது ஏனோ..
சொல்லடி தோழி?
சொல்லடி நீயும் ..

பொன்னும் பொருளும் 
தன்னிகரில்லா செல்வம் ஈட்டிட 
என்னை விடுத்து சேய்மை 
சென்றது ஏனோ?

பணையிளந்தோள்கள்  
இணையது விடுத்து  
சிறுத்து மெலிந்து 
வருத்தமுற்றது 
காணாய் தோழி! நீ 
காணாய் தோழி!

நிலமது  பிளக்கும் தீயாய் 
களத்து பசுமையை எரித்த 
வெம்கதிர்கள் வேகமாய் தாக்க 
தம்நிழல் குறைந்து 
மரங்களும்  உலர்ந்து நிற்கும் 
பாறைகள்  காய்ந்து 
ஈரப்பசையோ  இம்மியுமின்றி 
இறுகி கிடக்கும் 
நீரில்லா சுனைதனில்   
நெல்லது விழுந்தால் 
துள்ளிப் பொரிந்திடும் 
வெம்மையுடைய  வெறும் வெட்ட 
வெளியில் வருவோரின்றி 
வழிப்பறி கொள்ளையர் கூட   
சோர்ந்திருக்கும் ..
வறண்ட பாலைநிலத்தினிலே 
பரந்த பொலிவில்லா பாதையிலே 
சுழற்றியடிக்கும் சூறைக்காற்றில் 
கழன்று உதிர்ந்த முருங்கைப் பூக்கள் 
திரைக்கடல் அலையின் சிதறலென  
நுரையாய்  அலைந்து திரியும் ..
கரையில்லா காட்டினை கடந்து 
விரைந்து போன மாயமென்ன 
உரைப்பாயோடி தோழி  நீயும் 
உரைப்பாயோடி தோழி ?



கருவிகளுக்கு கூர்மை ஏற்றுபவன் காரோடன்' எனப் படுவான்..(wikisource.org)

அகநானூறு பாடல் #1 அடிப்படையாக கொண்டு எழுதியது. 

#அகம்#1
எளிமையாக்கம்: #ராஜி_வாஞ்சி



(https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/730)
அகநானூறு - 1

1. பாலைத் திணை    பாடியவர் - மாமூலனார்

துறை - பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது


வண்டு படத் ததைந்த கண்ணி ஒண் கழல்
    உருவக் குதிரை மழவர் ஓட்டிய
    முருகன் நல் போர் நெடு வேள் ஆவி
    அறு கோட்டு யானைப் பொதினி ஆங்கண்
5    சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
    கல் போல் பிரியலம் என்ற சொல் தாம்
    மறந்தனர்கொல்லோ தோழி சிறந்த
    வேய் மருள் பணைத் தோள் நெகிழச் சேய் நாட்டுப்
    பொலம் கல வெறுக்கை தருமார் நிலம் பக
10    அழல் போல் வெம் கதிர் பைது அறத் தெறுதலின்
    நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு
    அறு நீர்ப் பைம் சுனை ஆம் அறப் புலர்தலின்
    உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும்
    வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய
15    சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை
    நார் இல் முருங்கை நவிரல் வான் பூ
    சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர்உற்று
    உடை திரைப் பிதிர்வின் பொங்கி முன்
    கடல் போல் தோன்றல காடு இறந்தோரே

அகம்400 #1 கதை “காரோடி”

#அகம்400_க(வி)தை#1

காரோடி ..

காருடன் ஓடிக் கொண்டே நடனமாடும் திகில் சவால் (In my feelings challenge) பற்றிய பதிவா..என்று கேட்பவர்கள் ..ஏமாற்றம் அடைவீர்கள்...இது பழைய காரோடி ..கதை..

அது சரி நாடோடிக் கதை தெரியும் இது என்ன காரோடி கதை ..?

இதே குழப்பம் தான் பாவம் கதையில் உள்ள...இனியாவிற்கும்..



கத்தியை கூராக்கிக்  கொண்டே  “என்னாச்சு ஏன் ரொம்ப கவலையா இருக்கிற ‘ என்றாள் இனியா.

உன் கையில் இருக்குறது தான் காரணம் என்றாள் முல்லை.

கத்தியா? என்றாள் அவள்.

“இல்லை ..சாணை தீட்டுற  கல் ” என பதில் வந்தது முல்லையிடமிருந்து.

சாணை தீட்டுற கல்லா ? வியந்தாள் இனியா.

“ஆமாம். இரண்டு கல்லும், நடுவுல இருக்குற அச்சுல  எப்படி ஒட்டியிருக்கு ? “- முல்லையின்  கேள்வி தொடர்ந்தது.

“ஏதாவது பசையை போட்டு ஒட்டியிருப்பாங்க, எல்லாமே இப்படி தானே இப்போது” - பதில் சொல்லியவாறே  ஏன் இந்த கேள்வி இப்போது என்று  யோசிப்பதற்குள். ..

“ நீ இன்று ஒரு காரோடி ஆகிவிட்டாய்  “ ஏதோ வேற்றுல மொழி போல சொற்கள் உதிர்ந்தன முல்லை வாயிலிருந்து. 

என்னவாயிற்று இவளுக்கு என்று நினைத்தவாறே  இனியா கத்தியை பத்திரமான இடத்தில் ஒளித்து வைத்து விட்டு வந்தாள். 

முல்லையின் கைகளில் சாணைக்கல் உருண்டு கொண்டிருந்தது. அதை அவள் கூர்ந்து பார்த்தபடி

“ இது பசை போட்டு ஒட்டவில்லை ..அரக்கு வைத்து ஒட்டியிருக்கிறான் காரோடன் “ என்றாள் முல்லை.

இனியாவிற்கு  தலை சுற்றி பைத்தியம் பிடிப்பது போலிருந்தது. 
என்னாச்சு இவளுக்கு  என்று குழம்பியபடி ..பக்கத்தில் உட்கார்ந்தாள். 

“ ஏன்  அவ்வளவு தூரம் என்னை விட்டுட்டு  போனாய்?’” என்றாள் முல்லை. 

 ஆனால் அவள் பார்வையோ இனியா பக்கம் இல்லை...வேறெங்கோ காற்றில் நிலைகுத்தி இருந்தது. 

இனியா, முல்லையின் பிரச்சனையை ஓரளவு யூகித்து விட்டாள். “இவ எங்கிட்ட பேசல...ஏதோ காதல் சிக்கல்” என்று புரிந்து கொண்டாள். 

“எங்கே ..எவ்வளவு தூரம் “ என்ற இனியாவின் இரண்டு வார்த்தை கேள்விக்கு அருவியாய் கொட்டினாள் முல்லை.

“தலையில இருக்கிற பூவெல்லாம் .சிதறி .குதிரை மேல வந்த முரடர்களையெல்லாம் நல்லா  சண்டை போட்டு விரட்டுனானே பொதினி மலை அரசன் “ என்றாள் இவள்.

“என்ன ..பொதினி மலையா..” என்று இனியா  இழுக்க ..

“பொதினி மலை தெரியாதா ..உனக்கு? அதான் வேலும் வாளும்  வச்சுக்கிட்டு வீரமா வேளிர்குலத்தலைவன் ..இருப்பானே அவன் பெயர் கூட நெடுவேள் ஆவி..
அந்த மலையில இருக்குற யானை தந்தமெல்லாம் அறுத்து இருக்குமே ..இப்ப ஞாபகம் வருதா ..? என்றாள் இவள். 

இவளை இவள் வழியிலே போய் சமாளிச்சா தான் உண்டு என்று முடிவு கட்டிய இனியா ” ஆமா..ஆமா..சொல்லு..இப்ப எனக்கு புரியுது “ என்றாள் 

“அது சரி .நான் எங்கயோ ரொம்ப தூரம் உன்னை விட்டுட்டு போனேன்னு சொன்னியே..அது எங்கே “ என்றாள்  மெதுவாக.. 

கோபமாக முறைத்தாள் முல்லை . நீ எங்கே போனாய்? நீ தான் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறாயே? என்று கூறிவிட்டு 

“பொதினி மலையிலுள்ள   சாணை பிடிக்கும் சின்ன பையன் , சாணைக்கல்லும் அச்சும் விலகாமல் இருக்க அரக்கினை தடவி வாள்களையும் வேல்களையும் கூர்மைப்படுத்துவானே..அப்போ என்ன சொன்னான்  தெரியுமா? என்று விடுகதை போல கூறி நிறுத்தினாள். 

, “ சாணை தீட்டும் சின்ன பையனா ? என்று இனியா கேட்ட மாத்திரத்தில்  முல்லைக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை. 

“ காரோடன்* என்ன என் காதலனா…”  என்று பொரிந்து தள்ளினாள்.

“ காரோடனா..?  என்று இனியா முடிக்கும் முன்னரே ..

“காரோடன் என்றால் சாணை தீட்டுபவன் என்பது கூட மறந்து விட்டாயா நீ ..என்னமோ போ..ஏதோ ஆகிவிட்டது உனக்கு என்று சலித்துக் கொண்டாள் முல்லை.. 

பாவம் இனியா தலையும் புரியாமல் காலும் புரியாமல் ,” யார் , என்ன கூறினான் என்று நீயே கூறிவிடேன் ..” என்று பரிதாபமாக கூறினாள். 


“ மாறன்  கூறினானே ‘“மாறனையாவது தெரியுமா அதுவும் மறந்துட்டியா ..என் அன்புக் காதலன் மணிமாறன் ..என்று கன்னம் சிவந்தாள். பிறகு  “அரக்கு பூசி ஒட்ட வைத்த சாணைக்கல் போல் உன்னை விட்டு பிரியமாட்டேன் என்று சொன்னான்  ‘ ஆனா இப்போ  காசும் பணமும் முக்கியம்னு  என்னை விட்டுட்டு  ரொம்ப தூரம் போய்ட்டானே “ ..என விசும்பலாய் முடித்தாள் இவள்.

‘பார்த்தியா எப்படி நான் மெலிஞ்சுட்டேன்  பார் ..அவன் என்னை விட்டுட்டு போனதால ..” கன்னத்தில் வழிந்த நீர் கானலாகியது வெப்பத்தினால். 
“ 

‘பாலைவனத்திற்கா ..” இனியா  முடிக்கும் முன்  முல்லை வெடித்தாள் ...
..

“ வனமா ..அது..பாலைநிலம் பாழ் வெறும் ..பாழ்..நிலம் ..” செந்தமிழுக்கு மாறின சொற்கள்..

‘நிலத்தை பிளக்கும் நெருப்பால்  பச்சை வயலெல்லாம் எரிந்து ...அதன் தாக்கத்தை தாங்க முடியாத மரங்கள் காய்ந்து பாறைகள் கூட காய்ந்து வெடிக்கும்படி இருக்கும் இடம்..அங்குள்ள காய்ந்த சுனைகளில்  நெல்லை அள்ளி போட்டால் பொரியாக வெடித்து விடும் ..கொள்ளைக்காரர்கள் கூட அங்கு யாரும் வராததால் .வாழ வழியில்லாத பாழ் நிலம் ..சூறைக்காற்று சுழன்று சுழன்று அடிப்பதில் முருங்கைப் பூக்கள் எல்லாம் நாலாபக்கமும் 
கட ற்கரையோரம் ஒதுங்கும் வெள்ளை நுரை போல அங்கும் இங்கும் அலைந்து அல்லாடும்..எல்லையே இல்லாத பெரிய பொட்டல் காடு ..”   பொல பொலவென கண்ணீர் பெருக்குடன் தொடர்ந்தாள்..

‘அந்த கடுங்காட்டை எப்படித் தான் கடந்தானோ..நானறியேன் தோழி...நீயறிவாயோ ..தோழி..நீயறிவாயோ ..? அரற்றினாள் ..

சாணைக்கல்லும் அரக்குமாய் வாழ வேண்டிய நாங்கள் இன்று 
வீணாய் போனோமே என்று தேம்பினாள் முல்லை. 

அவளுக்கு அத்தனையும்  புரிந்தது நேற்று நடத்திய அகநானுற்றுப் பாடலின் பாதிப்பு என்று….

அது சரி ..ஏதோ பட்டப்பெயர் வைத்தாளே எனக்கு..” என்ன காரோட்டியா ..இல்லையில்லை காரோடி ..” 

அது என்ன .காரோடி ….ஆஹா ...காரோடன் ..ஆண்பால் என்றால் காரோடி பெண்பால்….காதலிப்பவர்களுக்கு நட்பாயிருக்குறது இருக்கே ...என் பேரு எனக்கே மறந்துடும்...போலிருக்கே ..இன்னும் ஒருவாரம் இந்த பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேன்…

முல்லை நான் வெளியூருக்கு போறேன் ..அடுத்த வாரம் தான் வருவேன்…….


* * காரோடன் - கருவிகளுக்கு கூர்மை ஏற்றுபவர்  (https://ta.wikisource.org)

(அகநானூற்று பாடல்    #1 ஐ அடிப்படையாகக்  கொண்டு கதை வடிவமாக எழுதிய முயற்சி )

நன்றி: sangacholai.in
Learnsangamtamil.com 

#அகம்400_க(வி)தைகள்#1 

#ராஜி_வாஞ்சி 

கமெண்டில் மூலபாடல் 
குறிப்பு: இந்தப் பாடலின்  கவிதை வடிவம் அடுத்த பதிவில்……..

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...