Saturday, May 27, 2017

செவ்விய தமிழ் வளர்த்த ... குறுந்தொகை #19

kurunthogai#19

#Rajikavithaigal
செவ்விய தமிழ் வளர்த்த
எவ்வியை இழந்து சோகம்
கவ்விய பாணர் தம்
யாழினை முறித்து - வாழ்வு
பாழென வெறுத்து..சிகை
பொன்மலர் போனதென
கண்மலர் கலங்கிய கதையாய்
புண்ணாகிப் போனதடி நெஞ்சு
வண்ணமயிலே ..பொன்னமுதே
வாசனை முல்லை சூடி
நேசன் எனைக் கட்டி வைத்த
கருங்கூந்தல் மயக்குதடி

மரமல்லி மரத்தினிலே
விரல் படாது வீணாய் போகுதடி - மனை
அருகே  மணக்குதடி தினமுன்னை
நெருங்கி வந்து சூட
மௌவலும்  மிக ஏங்குதடி
வௌவாலாய் சுற்றி மனம்
வானம் பூமி தெரியாது
கானம் மறந்த கருங்குயிலாய்
ஆனதடி ..மருதத்தான் மறுகுகிறேன்  
மோனம் கலைத்து விடு - உயிர்
தானம் கொடுத்து விடு ..

“எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்” எனத் தொடங்கும் #19.குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.


பாடியவர்: பரணர்.

சூழல்: தன் மனை விடுத்து பரத்தையிடம் சென்ற தலைவன், மீண்டும் மனம் திருந்தி தலைவியை அணுகி அவளை சமாதானப்படுத்துகிறான். அவளோ ஊடலை விடாது சினக்கிறாள். மீண்டும் மீண்டும் சமாதானம் செய்தும் அவனை அவள் ஏற்காத நிலையில் தலைவனின் கூற்றாக வரும் பாடல். தமிழ் புலவர்களை சிறப்பாக பேணிய எவ்வி என்ற சிற்றரசன் இறந்த செய்தி கேட்டு சோர்ந்து போன பாணர்கள் தங்களுக்கு முடியில்  சூடிக்கொள்ள பொன்மலர் கொடுத்து சிறப்பித்த சிற்றரசன் இறந்துபட்டானே என கலங்கி தங்கள் யாழ் எனும் இசைக்கருவிகளை முறித்து எறிந்தார் போல இவள் அன்பு இல்லாமல் என் வாழ்வு பாழாகிவிடுமோ ? எனக்கும் இவளுக்கும் உள்ள உறவுமுறை என்னாகுமோ என்று கலங்குவதாக அமைந்துள்ள பாடல்.


நன்றி (படம்) : விக்கிபீடியா
http://archives.thinakaran.lk/Vaaramanjari
நன்றி : முனைவர் பிரபாகரன்.
nallaKurunthogai.blogspot. com


எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.

சங்கப்பலகை
தமிழமுது கவிச்சாரல்  
கவியுலக
குறிஞ்சி
சங்கத் தமிழ்
கவி அகர
அமெரிக்க தமிழகம்


ஊர் உறங்கும் நேரத்துல... குறுந்தொகை #18

Kurunthogai#18

#Rajikavithaigal ( மீள் பதிவு)

ஊர் உறங்கும் நேரத்துல
யாரும் பாக்காம நீ வார
வெளஞ்ச மூங்கில்
வேலியிட்ட வேர்ப்பலா
நாலு ஒந்தோட்டத்துல - என்
மலநாட்டுக்காரா

பல நாளா உன் உசுர
நெஞ்சுல வச்சு
வஞ்சி மக எளச்சாலே

வேலியில்லா மரமாத்தான்
காலி நிலமா கெடக்காலே
ஒட்டிக்கிட்டு கிடக்குதே
உச்சியிலே அவ உசுரு
பெத்தம்  பெரிய பலா
ஒத்தக் குச்சியில
தொங்குற கணக்கா
இங்க யாருக்கு
மங்குன அவ மனசு புரியுது
பொங்குற நல்ல சேதி
எப்ப தருவியோ - என்
மலநாட்டுக்காரா

“வேரல் வேலி வேர்க்கோள் பலவின்” எனத்தொடங்கும் குறுந்தொகைப் பாடலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
எழுதியவர்: கபிலர்


சூழல்: இரவில் காதலியைச் சந்தித்துத் திரும்புகிறான் காதலன். அவனைச் சந்தித்து, காதலியை மணந்துகொள்ளுமாறு கேட்கிறாள் தோழி

நன்றி (படம்) : விக்கிபீடியா
நன்றி : முனைவர் பிரபாகரன்.
nallaKurunthogai.blogspot. com


குறுந்தொகை #18


வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.

பூ எனக் கொள்வேன் எருக்கை... குறுந்தொகை #17

kurunthogai#17

ஒற்றை எழுத்து  கொல்லுதடி

#Rajikavithaigal

பூ    எனக் கொள்வேன் எருக்கை
மா  எனக் கொள்வேன் பனையை
சீ     என ஊரும் தூற்ற
ஆ   என அயர்வேனோ?
நீ     என வாழும் என்னுயிர்
போ எனத் துரத்தலாகுமோ ?

கூ     எனக் கூவும் குயிலே..!
மை எனப் பொய் தடவி - இதயப்
பை தனை தாக்கினாயே  
தை அதை தையலே  அன்பால்  
கை  சேர்ப்போம் - என்
ஐ மிளிர் அஞ்சுகமே
கோ  என வாழ்ந்தேனே
தீ   எனச்  சுட்டாயே …
வை உன் மனதை
வா வான் போல் வாழ்வோம்


படம் (நன்றி) : wikipedia.com
தகவல் நன்றி : முனைவர்.பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com

குறுந்தொகை#17

மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே.


பாடியவர்:  பேரெயின் முறுவலார்

ஒட்டகம் மேயுற ... குறுந்தொகை #16

Kurunthogai_16 (version 1)_Ullor_kollo?

#Rajikavithaigal

ஒட்டகம் மேயுற  ...நாட்டுப்பக்கம்
கட்டு கட்டா ….துட்டு பாக்க
துணிஞ்சு போன மச்சான்

தெனம்  சிறுக்கியுந்தான்
மனம் மறுகி கெடக்கேனே
என்னய நினைச்சுத் தான்
பாப்பானோ என் ஆச மச்சான்

பனைமரம் முளைச்ச காடு
கள்ளிச்செடி நெறஞ்ச காடு - செவத்த
பல்லி சத்தம் கொடுக்கையிலே
கள்ளி உன்ன நினைப்பானே
சொல்லிகிட்டே நடந்து போனா
சுள்ளி பொறுக்குற என்
சோட்டுக்காரி.




*“உள்ளார் கொல்லோ தோழி” என்ற குறுந்தொகைப் பாடலை  அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
(பாடியவர்:பாலை பாடிய பெருங்கடுங்கோ)


பிரிந்த காதலனை எண்ணிக் காதலி வருந்துகிறாள். அவளுக்குத் தோழி சொல்லும் மறுமொழியாக இந்த பாடல் அமைந்துள்ளது.  



Kurunthogai_16 (version 2)

#Rajikavithaigal

விழி பேசி
வழி கண்டோம்
கிலி நீங்கி வாழ - பொற்
கிழி காண - கடு
வழி பாலை  கடந்தான்
மொழி பறித்த மோகனன்
பிழியும் மனதை மறந்தானோ?
தோழி நீ செப்பிடுக !

வழிப்பறி கள்வர்
கழியுடன் அம்பை பாறையில்
செழிக்கத்  தீட்டி நகத்தால்
ஒலிக்க செய்யும் ஓசையாய்
நெளிந்தோடும் செங்கால் பல்லி
களிக்கவோர் பேடை தேடியழைக்க  
வலிக்குமே  வஞ்சிக் கள்வனுக்கும்
உளியாய் நெஞ்சில் கள்ளிக்காட்டில்

*“உள்ளார் கொல்லோ தோழி” என்ற குறுந்தொகைப் பாடலை  அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
(பாடியவர்:பாலை பாடிய பெருங்கடுங்கோ)


பொருளீட்ட தன்னைப் பிரிந்த சென்ற கணவன்  தன்னை எண்ணிப் பார்ப்பானோ எனக்  வருந்தும் இளம்பெண்ணிற்கு , அவள் தோழி சொல்லும் மறுமொழியாக இந்த பாடல் அமைந்துள்ளது.  



தகவல் நன்றி : முனைவர்.பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com


குறுந்தொகை#16
உள்ளார் கொல்லோ தோழி கள்வர்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தாரே.


எங்கே என் மகள்? என... குறுந்தொகை #15

Kurunthogai #15

#Rajikavithaigal

எங்கே என் மகள்? என
எங்கும் தேடி - நொடி
தங்காது ஓடும் தாய் - நம்
நங்கையை கண்டாயோ?
பங்கத்திற்கு பயந்து
தங்கையென கருதி தம்
சுற்றத்து தோழியை வினவ

பெற்ற தாயை தேற்ற
உற்ற தோழி உடன் வந்தாள்

பறை ஒலிக்க
நிறை சங்கு நின்றொலிக்க
இறையாண்மை கொண்ட
நிறைமொழி மாந்தர்
கோசர் போல்
நேச மனமிரண்டும்
வாசமலர் சூடி
பாசமாய் பந்தம் புகுந்ததுவே

வளைநிறை கரம் கோர்த்து
சிலையழகு சின்னவள்
கழலணிந்த காளையவன் பின்னே
பழையதோர் ஆலமரத்தருகே
சேயிலை செருகிய -வெண்
வேலுடை வீரனாம்
பாலைத் தலைவனுடன்
ஆலைப் போல் தழைக்க சென்றாளே

“பறைபடப் பணிலம் ஆர்ப்ப” எனத் தொடங்கும் #15.குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

பாடியவர்: ஔவையார்.


இரு இளம் உள்ளங்களின் காதலை பெற்றவர்கள் ஏற்கவில்லை. எனவே வேறு ஊருக்கு சென்று திருமணம் என்னும் பந்தத்தில் இணைதலை “அறத்தொடு நிற்றல் “ என்கிறது தொல்காப்பியம். அதற்கு தோழியும் அவள் தாயும் உதவுகின்றனர். மகளை காணும் தாய் பதறும் போது உன் மகள் நல்ல முறையில் திருமண பந்தத்தில் இணைந்து விட்டாள் என்று கூறுவதாக அமைந்த பாடல். கோசர்கள் எனப்படும் அறநெறி தவறாத சான்றோர்கள் போல இவர்களின் அன்பும் உண்மையானது என்று தொனிக்கிறது பாடல்.




படம் (நன்றி) : wikipedia.com
tamilengalmoossu.blogspot.com
தகவல் நன்றி : முனைவர்.பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com

குறுந்தொகை#15
பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு

தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

பனை ஏறி விட்டேன் ... குறுந்தொகை #14

Kurunthogai #14
ஆணின்  நாணம்

#Rajikavithaigal

பனை ஏறி விட்டேன் ..
           மடல் வெட்டி விட
உனை மனதில் பூட்டியதால்
             மடமங்கை உடன் சேர
நினைந்து நினைந்து உருமாறி
            உடல் சோர்ந்து  ..
ஊர் சிரிக்க நின்றாலும்
            திடல் வந்து திடமாய்
தேர் இழுப்பேன் குருதியோட - சொல்
             விடம் விழுங்கி நிற்பேன்
கார்மேகம் கண்ட
             கான மயிலென இருந்தோமே
நார் மணக்கும் சரமுல்லை
            நாணும் வெண்பற்கள் ..
வேரில் பழுத்த பலா
              காணும் அமிழ்து செவ்வாய் ..
கூறும் சொற்களோ குறைவு
              மணக்கோலம் கொண்டு
ஊர் முன்னே கரம் கோர்த்து
            நானும் மிதந்து ..
ஊர்வலம் போகையிலே ..
           நாணுவேனே ..நறுமுகையே ..

“அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த” எனத் தொடங்கும் #14.குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

பாடியவர்: தொல்கபிலர்

இரு உள்ளங்கள் கலந்த பின்னர், தலைவி தாயின் கட்டுக்காவல் மற்றும் கண்டிப்பை தாண்ட முடியாது தவிக்கிறாள். அவளின் பெற்றோர்களின் சம்மதம் பெற ஆண் கடைசியாக செய்யும் யுக்தி மடலேறுவது. மடலேறுவதாக தலைவன் தெரிவிக்கிறான்.

மடலேறுவது நாணத் தகுந்த செயல் என்று கருதப்பட்டது.  தான் நாணம் இழந்தாலும்,  அவளை மணந்து மகிழ்ச்சியுடன் உடன் செல்லுகையில் அந்த நல்லவளின் கணவன் என்று சொல்வதை கேட்கும் போது நாணத்தை மீண்டும் பெறுவேன் என்பதாக பாடல் அமைந்து உள்ளது.

படம் (நன்றி) : http://www.tamilvu.org
தகவல் நன்றி : முனைவர்.பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com


அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே பெற்றாங்
கறிகதில் அம்மவிவ் வூரே மறுகில்
நல்லோள் கணவன் இவனெனப்

பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே.

மயங்குகிறாள் ஒரு மாது... குறுந்தொகை #13

Kurunthogai #13

மயங்குகிறாள் ஒரு மாது..
இனிமை மாறி
தனிமையான  மாயம்
இனி வருவது குறுந்தொகை#13


கருங்குவளை ….
இரு விழிகள் …
பெருகி ஓட …
மறுகி தனியே …
அருவி சூழ் அன்பரே..!

அசையும் குன்றாய் யானை
இசைந்து இணங்க ..
தேகம் தேய்க்கும்
பாகன் பாங்காய் ..
மேகம் கவிழ்ந்து ..
வேகமாய் கரையும்
சொரசொரத்த ..செம்மண் திட்டு
பரபரத்த சிறகுடன் ..
கரும்பாறை நிழல்
அருகே அனைத்து
திசை மறந்து
இசையான  இனிய நொடி
பசுஞ்சோலை பனி நாடன்
விசும்பாய் உடன் நானும்

அன்றில் ஆனோம்
இன்று நீ எங்கே ..?
தென்றலுடன் வெளிச்
சென்றாயோ ?

கருங்குவளை ….
கருகும் கணம்….
உருகாதோ உந்தன் மனம் ..?

“மாசறக் கழீஇய யானை” எனத் தொடங்கும் #13.குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

பாடியவர்: கபிலர்.

கூடி மகிழ்ந்திருந்த தலைவனை ,சிலநாட்களாக காணாது வருந்தும் தலைவி. குவளை மலர் கண்கள் பசலை நோயுற்று ஆறாய் பெருகிய நிலை.. தன் தோழியிடம் தலைவி பேசுவதாக அமைந்துள்ளது..

#Rajikavithaigal 

படம் நன்றி: wikipediacom, nanjilsubhash.blogspot.com
தகவல் நன்றி : முனைவர்.பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com


மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே தோழி

பசலை ஆர்ந்தன குவளையங் கண்ணே.

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...