குறுந்தொகை#8
இது ஒரு *பண்ணையாரின் கதை…:). வயல் ஓரம் .. .குளக்கரை மாமரம் . மாம்பழம் பழுத்து தானாக தண்ணீரில் விழுகிறது.. வாளை மீன் சரியாக வாயை திறந்து .பழத்தை உண்கிறது.. மனைவியை விட்டு பரத்தையிடம் சென்ற தலைவன்..மீண்டும் மனம் மாறி மனைவியிடம் வந்து விட்டான். மனைவியின் சொல் கேட்டு நடக்கிறான் என்று பரத்தை அவனையும் அவன் மனைவியையும் இகழ்ந்து பாடும் பாடலாக குறுந்தொகை #8.
*வயலும் வயல் சார்ந்த நிலமுமாகிய மருதநிலப் பாடல்
காலை மாலை
வேலை மறந்து ..எனை
மாலையாகக் கொண்டவனே!
இளநீர் தென்னை சூழ்
கழனியோர மாங்கனிகள்
பழுத்து பாரம் தாங்காது
விழுந்தோடும் பக்கத்து
பொய்கையிலே..
மெய் நோகாது மிளிர்
பழுங்கு விழி கொண்டு - கனி
விழுங்க மொய்த்து வரும்
வாளை மீன் கூட்டம்
கயலாடும் கழனியிலே
வயலோரம் வாழ்பவனே ..
மூலையிலே எனை விடுத்து- சிறு
காளையவன் தாய் பின்னே
மோழையென சென்றனையோ?
நாடி அவள் பின் சென்றதனால் - கண்
ஆடியென அவள்
பிம்பம் ஆனாயோ ?
பெண்ணவளின்
கண்ணசைவில் கரைந்தாயோ?
சின்னவனின் அன்னையிடம்
கட்டுண்டு போனாயோ ?
பெட்டிப் பாம்பாய் ஆனாயோ ?
கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் என்று தொடங்கும் #8.குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
பாடியவர்:ஆலங்குடி வங்கனார்.
உரை: வயல் அருகில் உள்ள மா மரத்திலிருந்து, பழுத்துத் தானாக விழுகின்ற இனிய பழங்களைக் கவ்வி உண்ணும் வாளை மீன்கள் வாழும் ஊரை உடைய தலைவன், என் வீட்டிலிருந்த பொழுது என்னை வயப்படுத்துவதற்காக என்னைப் பெருமைப்படுத்தும் மொழிகளைப் பேசினான். இப்பொழுது, தன்னுடைய வீட்டில், முன்னால் நிற்பவர்கள் கையையும் காலையும் தூக்குவதால் தானும் தன் காலையும் கையையும் தூக்கும் கண்ணாடியில் தோன்றும் உருவத்தைப்போல்,தன் புதல்வனின் தாய் (மனைவி) விரும்பியவற்றைத் தலைவன் செய்கிறான்.
நன்றி: முனைவர் பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com
No comments:
Post a Comment