#2
மகரந்த மழை நடுவே
நுகர்ந்தாடி நல்
நறும்பூந்தாது கொள்
கருவண்டே ..
பெருங்கேள்வி எனக்குண்டு
மலர் கொண்ட மணமெல்லாம்
களம் கண்ட நீ அறிவாய்
உளம் கொண்டு
உரைப்பாய் உண்மைதனை ..
நெருங்கியதோர் நேசங்கொண்டாள் - முல்லை
அரும்பியதோர் பல் வரிசை - முகில்
விரும்பியதோர் மென் மயிலாள்
கருங்கூந்தல் கொண்டதுமோர்
நறுமணமும் நானிலத்தில் நானறியேன்
நிலந்தன்னில் நீயெங்கும்
பல மலர்தன்னை கண்டதுண்டே
கலையழகு கண்மணியின்
கார்கூந்தல் மணங்கொண்ட
ஓர் மலரை நீ கண்டதுண்டோ?
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” எனத் தொடங்கும் பிரபலமான குறுந்தொகைப் பாட்டினை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
பாடியவர்: இறையனார்.
உரை: பூந்தாதை ஆராய்ந்து, தேனை உண்ணுகின்ற வாழ்க்கையையும், அழகிய இறகுகளையும் உடைய வண்டே! நான் கேட்க விரும்பியதைக் கூறாமல், நீ கண்டு அறிந்ததையே சொல்வாயாக! நீ அறியும் மலர்களுள், என்னோடு பழகியதால் நெருங்கிய நட்பையும், மயில் போன்ற சாயலையும், நெருங்கிய பற்களையும் உடைய, இந்த இளம்பெண்ணின் கூந்தலைப் போல, நறுமணமுடைய மலர்களும் உளவோ?
நன்றி: முனைவர் பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com
#Rajikavithaigal
No comments:
Post a Comment