மாமரத்து ..மகரந்தம்
சாமரம் வீசியழைக்க
மலைக்காடு கழனி தாண்டி
நுழையும் நல் வண்டினங்கள்
சோலை சூழ் சின்னவனே
மாலையாய் வண்டினம்
காலை மாலை வேளைதனில்
சாலையோரம் மதிமயங்க - கட்டுக்
காவல் கடலளவு மிக
ஏவல் புரியும்
காலமிது.
கரம் பற்ற
காரணம் தேடும் - உன்
தோரணைக்கு இங்கு செவியில்லை
வாரணம் ஏறி வரும்
நேரத்தில் ..இனிய
கரும்பென்ன மென்
விரும்பு சொல்
கூறும் எண்ணமில்லை என
நின்ற நெஞ்சே ! - நீ
சென்ற இடம் எங்கே?
வென்று விட்டான் ..அவன்
என் மனதை
என்றும் போல்
இன்றும்.
“மெல்லிய இனிய மேவரு தகுந” என்ற குறுந்தொகைப் பாடலை அடிப்டையாகக் கொண்டு எழுதியது.
பாடியவர்: அம்மூவனார்
தலைவியின் காதலை அறிந்த அவளுடைய பெற்றோர், அவளைக் காவலில் வைத்தார்கள்.தலைவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்யாததால், தலைவி தலைவன் மீது கோபமாக இருக்கிறாள்.காவலில் வைக்கப்பட்டிருப்பதால், தலைவனைக் காணும் வாய்ப்பு தலைவிக்கு அரிதாக உள்ளது. இருந்தாலும் எப்பொழுதாவது அவனைக் காணும் வாய்ப்புக் கிடைக்கிறது. இனி, தலைவனைக் கண்டால், அவனிடம் அன்பான இனிய சொற்களைப் பேசக்கூடாது என்று தலைவி மனவுறுதியுடன் இருக்கிறாள். ஆனால், அவனைக் கண்டவுடன், அவளையும் அறியாமல் அவனிடம் அன்பாகப் பேசும் தன் மனதை கடிந்து கொள்கிறாள்.
#குறுந்தொகை 306
மெல்லிய இனிய மேவரு தகுந
இவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீ
மறத்தியோ வாழியென் னெஞ்சே பலவுடன்
காமர் மாஅத்துத் தாதமர் பூவின்
வண்டுவீழ் பயருங் கானல்
தண்கடற் சேர்ப்பனைக் கண்ட பின்னே.
நன்றி: முனைவர். பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com