Friday, April 28, 2017

நொடி முட்கள் நிற்பதில்லை



நொடி முட்கள் நிற்பதில்லை
நவீன வகை (மீ மொழி) கவிதைகள்
கவி விளக்கம் :
நிற்காத நொடி முட்களே கற்காலம் முதல் தற்காலம் வரை நிதர்சனம் அந்நொடிப் பொழுதே இறை தரிசனமும் என்பதை உணர்ந்தால் கழுத்தருகே வந்த குறுவாள் கவின்மிகு கழுத்தணியாக ..இறை அளித்த வரமாகவும் மாறுமன்றோ ? நொடி முள்ளை நொடிக்காது சிக்கென பிடித்து சிரமேற்றிட்டால் ..சிந்தையெலாம் சிறக்குமன்றோ? கடந்த காலம் ..எதிர்காலம் ..வலைகளில் சிக்காது மீண்டு நிகழ்கணத்தில் நிறைபொருளாம் இறைவனை இச்சணத்தில் இங்கிப்போது கண்டு திளைக்கலாம் என்பது ஜென் தத்துவ செவ்வறிவு ..
படியளக்கும் பெம்மானும்
நொடி முள்ளை
கொடியெனவே கொண்டிடுமோ ?
விடியலேங்கி புரண்டழுகும்
கடினமிகு நோயுற்றோர் உள்
ஒடிக்கும் நொடிகள் உயிரறுக்க
செடியாய வல்வினையின் கைப்பாவையென
கடும் மின்னலென
கடுகியோடும் வீரனுக்கு
நொடியின் பின்னமதின்
பிடி தன்னில்
தடித்த தங்கக் கோப்பையுமே
படிப்புடனே பட்டறிவும் பெற்றிங்கு
விடுத்த வினாடிதனை விண்ணேற்றி
தொடுத்த நல்லிறை மாலையாக்கி
கெடுத்த மடியகற்றி மாண்புற்றோர்
எடுபிடியானதுண்டோ ?
நெடு வெள்ளமதிலூறும்
நடு வள்ளமதில் ஊசி முனை
விடு துவாரமது ..வீழ்த்திடுமே
படு குழியினிலே ..காலமது
நடுவனவன் நமக்களித்த வள்ளமுமே
மடு மலையாம் காட்டாற்று ஓட்டமதில்
மாடு மனை மகிழ்வுற்று
வீடுபேறு விளங்கிடவே
நொடி முட்கள் சிரமேற்ற
தடித்த மனம் தயவுறுமே
வெடிக்கும் ‘வினை புதிது’ விலகிடுமே
பிடித்த ‘பழவினைகள்’ பதுங்கிடுமே
குறிப்பு : கெடுத்த மடியகற்றி - கெடுத்த சோம்பல் அகற்றி
வள்ளம் - படகு /தோணி
நடுவனவன் - நடுநிலை தவறா இறைவன்
மடு மலையாம் காட்டாற்று ஓட்டமதில் - மேடு பள்ளங்கள் நிறைந்த மானிட வாழ்க்கை
நிகழ் கணத்தில் வாழத் தொடங்குங்கால் விழிப்புணர்வு மேம்படுத்தலால் புதிய வினைகள் ( ஆகாமியம்) அளவில் குறையும் ..’பழவினைகள்’ ஆன சஞ்சிதம் வலிமை குன்றும்

பருவ மழை காற்று

பருவ மழை காற்று தமிழத்திற்கு மழையையும், மண்ணை விட்டு பிரிந்தவர்களுக்கு பழைய நினைவுகளையும் அள்ளி தெளிக்கிறது
மழை நீர் கப்பல்கள் 
**************************************
இளஞ்சிவப்பாய் களிமண் கலந்து
மழைவெள்ளம்
கண்ணாமூச்சி காட்டும்
எதிர்பக்க வாய்க்காலில்
விரைவாய் ஓட
வினாடி நேரம் வியந்து
பக்கம் போய் பார்க்க குடும்ப
பாராளுமன்றத்தில் அனுமதி உண்டு
பக்கத்துணையாய் அண்ணன்கள்
பாதுகாப்பிற்கு பத்திரமாய் கூட்டிச் செல்ல
மறக்காத மனக்காட்சி
மழையுண்டு ..மண்ணோடு ஓடும்
மழை நீருண்டு ..வாய்க்கால் உண்டு

நூலறுந்த பட்டங்கள் - ஹைக்கூ

No automatic alt text available.

இன்று வெற்றி பெற்ற ஹைக்கூ
(கவியுலக பூஞ்சோலையில்)

நூலறுந்த பட்டங்கள் 
பறக்க முடியாமல் திணறுது
பொறியியல் கல்வி

மீன்கள் துள்ளும் குளம்

இன்றைய ரென்கா தொடர் ஹைக்கூ (கவியுலகப் பூஞ்சோலை)
மீன்கள் துள்ளும் குளம்
சிறகடிக்கும் பறவைகள்
அமைதியாய் கொக்கு

இப்படிக்குப் பிரியமுடன் அப்பா

மூன்றாம் மாதத்தில் தலை
நின்ற நொடி ...
நின்று ரசிக்க ஏங்கியதுண்டு
நின்றிட்டால் ….
வென்று நீ வருங்காலத்தில் - நான்
வெறும்பயலாயிருப்பேனே
 பெரும்புயலாகிடுமே உன் வாழ்வென
இரும்படிக்குமிடத்தே
விரும்பியிருந்தேன் - வீடு
நெருங்குகையில்
அரும்பெனவே ….
திரும்பும் தலையுடன் .. ..நீ
குப்புற விழுந்த கணம்
அப்புறம் அகலாமலிருக்க
அடி மனதில் ஆசையுண்டு
தடித்த நூல் காலத்தே - நீ
படிகளேற ..நான்
படி அளக்க ...பக்கச் சுவரில்லா பத்தாம்
மாடியில் பகலவனின் பாய்ச்சலில்
வாடி நின்றேன் ..பொழுது சாய்கையில்
சாடி பூவாய் சரிந்து நீ ..பக்கம்
தேடி குப்புற விழும் முயற்சியில்
ஓடி வந்து அள்ளினேன்
தவழ்ந்த தருணம் ..
கவிழ்ந்த கவினழகு ..
கலைந்தோடிய ..மேகங்களாய் ..
அடுத்ததொரு பிறவியில்
அருகிலிருந்து அனுபவிக்கும்
அருந்தவம் செய்திடுவேன்
இப்படிக்குப் பிரியமுடன்
அப்பா 

முகமூடி

அடையாளம் தேடி அலையும் 
ஆர்ப்பாட்டம் அகிலத்தில் ஏராளம்
அடையாளம் மறைக்கும்
அவலம் அதற்கு மேல் தாராளம்
கிடைத்த வாழ்வை கீழே போட்டு
மடுவுக்கும் மலைக்கும் .
இடைவெளி கணக்கிட்டு
தடுமாறி பிணக்கிட்டு மாளும்
கிடைக் கூட்டம்.
விடைக்கு போவதெங்கே?
முகமூடிக் கூட்டமே ..முழுமையாய்
நடையாடும் நாட்டினிலே
சுவைமடை நீரென
சாக்கடையில் வீழும் சாபங்கள்
போக்கிடம் இல்லா தாபங்கள் ..
காப்பிடம் எனும் களங்களில்
காறித் துப்ப கதைகள் ஆயிரம்
சேரியிலும் உண்டு முகமூடி
சேர்மானம் சரியின்றி
வருமான வாய்ப்புக்கு
பெரிய இடத்து முகமூடியிலோ
 கரிய நிறம் அதிகமுண்டு
உரிய பொருளின் உடமைக்கு
உரிய போராட்டம்
அரிய பொருளுக்கு ஐம்புலனுண்டு
ஆறறிவுண்டு அதற்கு பெயர்களுண்டு
மனைவியென்று மகளென்று மகனென்று
வினைப்பெருக்கிற்கு குறைவில்லை - பல
பனையுயரம் அதுவுண்டு
மனைமாட்சி மக்கள் நலம்
அனைத்தும் அன்பு அறன்
கனைத்து வரும் வார்த்தை ஜாலம்
முனுசாமி கடை முகமூடியில்
தினுசுக்கு ஒன்றாய் நிறமிருக்கும்
மனுசப்பய முகமூடியில்
நிமிசத்துக்கு ஒரு நிறமிருக்கும்

இரவல் வெளிச்சம்

இரவல் வெளிச்சம் …
பரவலாய் உண்டு பாரினிலே
பகலவன் வெளிச்சம் வாங்கி 
பால் நிலா பொழிவதுண்டு ..
கதிரவனிடம் கடனொளி பெற்று
சதிராடும் சந்திரமுகி
விதிர்க்கும் வெம்மை விடுத்து
விரிக்கும் தண்மை ஒளி
சிறக்கும் சிந்தையுமே மதிவொளியால்
சிரிக்கும் கவியுள்ளம் ..
தன்னொளி தந்தது தரணியில்
கண்மணியாம் கதிரவன் என
விண்மதி மறந்திடா மதி கொண்டு
மென்மதியால் செருக்கழித்தால்
சுட்டும் விழிச் சுடராய்
சூரிய சந்திரரும்
பேரியக்கத்தின் பேறாய் வந்திடுவர்.
மாந்தர் வாழ்வதனில்
இரவல் இல்லா வெளிச்சமுண்டோ ? - இப்
பரவெளியில் ..? அத்தனையும்
இரவலும் அதன் வழி
பரவலுமன்றோ?
சுத்தவெளியொன்றே ..சுகமான
நித்தியமன்றோ ...சுற்றும் அனைத்தும்
மத்திடைப்பட்ட ...துகளன்றோ ?
நேற்று நீ இரவல் கொண்டாய் ..
காற்று வழி கடந்து சென்றாய்
போற்றும் உயர் தன்மை கொண்டாய்
வேற்று மனிதனுக்கு இரவல் தந்தாய்
இன்று இரவல் பெற்றவன்
நன்றென நால்வர்க்கு வெளிச்சமாவன்
நாளைப் பொழுதினாலே ..
எங்கிருந்து யாது கொணர்ந்தோம் ?
இங்கிருந்து யாதும் உற்றோம்
இங்கதனை பங்கிட்டு விட்டோம் - இஃது
நன்கெனவே வாழ்தற்கு சான்றன்றோ?

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்

இன்று பரிசு வென்ற ஹைக்கூ
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் கண்டோம் /
மலை காடு வயல் கடல் முறைமை திரித்தோம் /
அடுக்குமாடியுலகு

நிர்வாண நிலங்களின்று

களை நீக்கியால் கசடாக்கினர்
தழை சத்தென தன்மை மாற்றினர்
மணிச்சத்தென மண் மாய்த்தனர்
பூச்சிக்கொல்லியாய் வேடம் பூண்டு - மண்
மூச்சை நிறுத்தியதென்ன மாயம்
வேதிப்பொருட்கள் வித விதமாய்
மீதி மண்ணையும் மலடாக்க
நிர்வாண நிலங்களின்று நிதர்சனமாய்
சர்வாங்கமும் அடங்கி வேளாண்மை

தூக்கணாங்குருவி

வித்தக வீடு கட்டும் 
வித்தையை தம் 
நத்தை வடிவ
தூக்கணாங்குருவி கூட்டாலே 
திக்கெட்டும் பரப்பியதே 
கைக்கெட்டா தொலைவினிலே 
கலைநயம் பாவியதே 
உயர் கோபுர 
அடுக்கு மாடி 
குடியிருப்புகட்கும் 
முன்னோடி இந்த 
தூக்கணாங்குருவி தானோ ? 
 பனையுயரம் பறந்தோடி 
வினையாற்றி விரைந்தோடி 
 தினையளவு திகைக்காது 
மனையாக்கும் மாண்பென்னே ?

விழுந்தாலும்_விதையாகிடு

விழுந்தாலும்_விதையாகிடு
கட்செவிச் செய்தி 
உட்புகுந்ததுவே ...
நாட்டுநல
வேட்புக்கானதுவே ...
கற்பாறை மனத்தினையும்
கரைத்திடுமே ..
உரைத்ததொரு விதம்..
தேசம் காக்கச் சென்ற
நேசமிகுச் சிப்பாயின் குரலது ..
எல்லையோரம் விரையும் காலமது ..
தொல்லைகள் தோளோடு பவனி
இல்லை நானெனச் செய்தி வரலாம்..
பிள்ளையொன்றைப் பிறந்த நாட்டிற்கு
முல்லை மாலையாய் ஈந்த
தில்லையாடி வள்ளியம்மை நீயம்மா
கொள்ளை இன்பமும் நேரலாம்
சில்லிட்ட உடலும் ஊர்த் திரும்பலாம் ..
வீரன் நான் ஊர் வந்திட்டால்….
சேரன் மாதேவி சென்று - வீரப்
பேரனென ..மகிழ்ந்திடுவோம் .
வீரமரணம் விடயமாய் வந்திட்டால்
சோராதே ..அம்மா ..அச்சேதியால் .
வீரம் விதைத்தோம் ..நாட்டை
மாறாக் காதல் செய்த - வீர
வர்மனை வாரிசாய்ப் பெற்றோமென
கர்வம் மிகக் கொண்டுவிடு என்னுயிரே!
தரைத் தொட்டாலும் - என்னுயிர்
கறையில்லா விதையாகத் தானம்மா
வீழும் இவ்வுலகில் ..
குறிப்பு : கட்செவி - வாட்ஸப் என்ற குறுஞ்செயலிக்கு தமிழ் பதம்

வானம் ..கண்டேன்...காணவில்லை

வானம் ..கண்டேன் …
காணவில்லை வெண்ணிலவை ..
கனிமுகமாக்கிக் கொண்டனையோ?
வானம் ...கண்டேன் …
ஏனோ இல்லை...விண்மீன் கூட்டம்
கண்ணொளியாய் கொண்டனையோ ?
வானம் கண்டேன் ….
சலித்தாலுமில்லை ..கருமுகில் ஓட்டம்
நெளிக்கூந்தல் கொண்டனையோ?
வானம் கண்டேன் …
சிதறும் சிறுவிண்கற்கள் சிக்கவில்லை ?
சித்தகத்திச் சிரிப்பாக்கிக் கொண்டனையோ ?
வானம் கண்டேன் …
வர்ணஜால வானவில்லெங்கே போனதுவோ?
சொர்ணவுடைக் கொண்டனையோ?
வானம் கண்டேன் …
காணவில்லை வெண்மேகமதை
மேனியாக்கிக் கொண்டனையோ?
வானம் கண்டேன் …
சுழலவில்லை ..வெண்புறாக்கூட்டம்
சூழலாக்கிக் கொண்டனையோ ?
வானம் கண்டேன் ..
சிறகடிக்கும் ..தேன்சிட்டுக்கள் சிலதுமில்லை
குரலாக்கிக் கொண்டனையோ?
வானம் கண்டேன் ..
ஏனில்லை பட்டாம்பூச்சியின்று ..
மனதாக்கிக் கொண்டனையோ ?
வானம் கண்டேன் ..
கானமிசைத் தேவதைகள்
வீணையென நீயிருக்க...
கானமென நான் உருக ..
மோன நிலையிருக்கக் கண்டேன்.

மனதோர மழைச் சாரல்

மழலை மிழற்று மொழி
மனதோர மழைச் சாரல் ..
மழைநேரம்
மயக்கும் மாலை ..
வியக்கும் விழியோடு சன்னலோரம்
விலையில்லா ..
பழையதோர் மனங்கவர் …
புதினம் ஓர் கையில்
புதுப்பாலில் தேநீர் .ஓர் கையில்
மனதோர மழைச்சாரல் ..
கண் சிரிக்கும்
உண்மை உணர்வு - உயிர்
தோழமையுடன் தோள் உரச
காலம் மறந்து கதைத்தல் ..
உணர்வெல்லாம் பெருவெள்ளம்
மனதோர மழைச்சாரல்
பல நாள் பயணத்திற்கு பின்
வெளி உணவு சலித்து ..
பழையது உண்டாலும்…
களையான முகம் ..
கலைப்பில்லா பரிவு
விலை மதிப்பில்லா விரல்
அளவு வீட்டு ஊறுகாய் ..
மனதோர மழைச்சாரல் ..
மழை போல மகிழ்வான ..
வாழ்துணை ..
மகிழ்வான நிகழ்வு பகிரும்
தோழமை ..தோள் சாய
வாழ் நாளெலாம் ..
மனதோர ..மழைச்சாரல் ..

தீக்குள் விரலை வைத்தால் ….

தீக்குள் விரலை வைத்தால் ….
தீங்கு மிக நேருமென …
தீர்க்கதரிசி கவிக்கென்ன தெரியாதா?
தீக்குள் விரலை வைத்தால் -நின்னை
தீண்டுமின்பம் தோன்றுதென்றால்
தீட்டிய அறிவும் திகைக்காதோ …?
காக்கை சிறகினிலே ..
கருந்தன்மையவன் கண்ணன்
மரத்தினிலே …
பசுந்தன்மையவன் கண்ணன் ..
கீதங்களில் ….
நாதமெனும் தன்மையவன் கண்ணன்
நகரும் உருவமாம் புள்ளினத்திலும் ..
நகரா உருவமாம் புல்லினத்திலும் ..- கண்
கவரா அருவமாம் ஒளியிடத்தும்
தவறா உயிர்த்தன்மையது இறையாம்…
கண்டதெலாம் கண்ணனாகக்
கண்டதனால் தனை மறந்தனனோ ?
கண்ணனாகத் தான் மாறினனோ ?
தீக்குள் விரலை வைத்தனனே
தீண்டுமின்பம் தோன்றியதே ….
நந்தலாலாவுக்கு …
வெந்த தனலுமொன்றே ….
தண்ணிலவுமொன்றே …
செப்பிடுவீர் செகத்தீரே
இப்படித்தான் புனைந்தனனோ
செப்படிவித்தை கவி பாரதி
தப்படி தவறி வைத்திருந்தால் ..
எப்படி என்றே விளக்கிடுவீரே ..!

கற்றை வெள்ளைக் காகிதம்

No automatic alt text available.
கற்றை வெள்ளைக் காகிதம் பற்றி
சற்றே யோசித்தால் ..- இவை
ஒற்றை ஒற்றையாய் ..
வேற்றிடம் போகுமோ..?
ஒன்றாய்க் கூடி நூலாகுமோ ..?
நன்றாய்ப் படிப்பவன் ஏடாகுமோ..? - இளம்
கன்றுகளின் வானவில் வர்ண
குன்றாகுமோ ..? - காதலில்
மன்றாடும் மடலாகுமோ..? - மாணவர்
திண்டாடும் வினாத்தாளாகுமோ..?
தென்றல் வீசும் …
முன்றிலில் காகிதப் பறவையாகுமோ…?
கல்லூரி வாசலிலே ..
துள்ளிடும் அம்பாகுமோ….?
யாப்பினை ஆராய்ந்து ..
காப்பியக் களமாகுமோ ..?
பிறந்தநாள் வாழ்த்தாகுமோ …?
மறந்திடா மளிகைப்
பட்டியலாய் ...நீளுமோ..?
வெட்டி ஒட்டிப் பள்ளி
திட்டப் பணியாய் ..பாராட்டு
கேட்டு நின்றிடுமோ …?
முனைவர் பட்டத்திற்குத் . ..
துணையாகி ஆய்வாகுமோ …?
கற்றை கற்றையாய் கோடியதை
ஒற்றைவரிக் கணக்கெழுதும் வங்கியிலே
பற்று வைக்கும் சுவடாகுமோ ….?
செடியாய் மரமாய் ….நேற்று
படிமங்களாய் ………..இன்று - என்ன
வடிவங்களோ…….. ..நாளை..?

கண்ணதாசன் நினைவு நாள் (17-10-2016)

கண்ணதாசன் நினைவு நாள் (17-10-2016)
*******************************************************
பாட்டுக்கொரு பாரதி வந்தான்
நாட்டைத் திருத்த வந்தவரோ
பட்டுக்கோட்டையார் ..
செட்டிநாட்டு செம்மல்
பட்டித்தொட்டியெலாம்
கொடி
கட்டி பறக்க வந்த
தமிழ் தாசனவர் ...சமயத்தில்
தமிழும் தாசனவருக்கு ..

என்ன புண்ணியம் செய்தேன் ..

என்ன புண்ணியம் செய்தேன் ..
கண்ணனென உள்ளங்கவர்
கள்வனே ..மகனாக
செல்லமவன் அகவை
நாலிரெண்டில் ..
நல்லதொரு ..
விழாவினிலே ..
நல்விருந்தாய்
திளைத்திருந்த .
வேளையிலே ..கண்கள் …
குளமாக ..-
உள்ளம் தேம்ப ...
வெள்ளை பட்டுடையில் ..
வெள்ளமென கண்ணீர்த் திட்டுகள்
அள்ளி அணைத்திட்டேன் அன்பனை
சொல்லடா ..என் செல்வமே..!
உள்ளத்தில் காயமென்ன?
பிள்ளைப் பேசியது விசும்பலிடை :
அள்ளி எரியும் ..
எச்சில் இலைக் கூட்டத்தில் ..
அச்சச்சோ கண்டேனே
பிச்சைக்காரர்கள்
முண்டியடித்த காட்சி ..
வண்டி வண்டியாய் உணவதனை
திண்டுக்கல் சமையல்காரர்
கொண்டு வந்து குவித்தாரே
கொடுப்பதற்கு குறையேதம்மா
தடுப்பவர்கள் யாரும் இங்குளரோயம்மா
திகைப்புற்றோம்
திண்ணையிலிருந்த
பண்ணையார் முதல்
பண்ணையாள் வரை ..
புண்ணியம் மிக செய்தேனய்யா
மண்ணுயிரை தன்னுயிராக காணும்
புண்ணியனை மகவாய் பெற
வரம்_வேண்டும்_கொடுப்பாயா..என
கரம் நீட்ட ஏதுமுண்டோ இறையிடம் ?

ஓய்வாக அம்மா.... ஓயாத பேச்சு

தரை தவழும் தங்க அரளி
தோட்டத்து மூலையிலே
கண்ணைப் பறிக்கும்
வண்ணம் வாரியணைக்கத் தூண்டும்
கண்ணாடி சன்னல் வழி
ஏக்கப் பார்வையோடு
பூக்களோடு சாடை பேசும்
கோலி குண்டு கண்கள் ..
நான்கு பருவமும் பார்க்கும்
பாக்கியசாலி ..
வெள்ளை மழை பொழியும்போது
புரண்டு விளையாட ஆசை
பனிப்பொழிவுக்கும் ..
பணிமனைக்கும் சம்மந்தமுண்டோ ?
வெள்ளை மழையில்
வெள்ளந்தியாய் ..
வேலை வெட்டியில்லா பனிமனிதன்
வார இறுதி குழந்தைகள் கொண்டாட்டம்
பனிமனிதன் வெளியே
சன்னலுக்கு உள்ளே
பனிமனிதனை பார்த்துக்கொண்டு நான் ..
வண்டி நிறுத்தும் ஓசையில் புறப்படும்
ஓட்டப்பந்தயம் எனக்கும் மணிக்கும்
ஒவ்வொரு நாளும் வெல்பவன் அவனே
முன்னங்கால்களை முதலில் அம்மாவின் மேல்
சாய்வு நாற்காலியில்
ஓய்வாக அம்மா
ஓயாத பேச்சு நானும் மணியும்
அத்தனையும் அழகு
உன் மடியில் நான்

இன்றைய சென்ரியு

இன்றைய சென்ரியு போட்டியில் வெற்றி பெற்ற என்னுடைய படைப்பு
சிரித்த முக
வரவேற்பாளர்
சிடுமூஞ்சி வீட்டில்

ஆசிரியர் தின வாழ்த்து

ஆசிரியர் தின வாழ்த்து
அகரத்தை….
அரிசி நெல்லில் 
அரி ஓம் என்றெழுதி
சிரசிலேற்றி
சிகரம் நோக்கிய
சீரிய பயணத்தை
 வீரியமாய்
விதைத்து ….கல்வி
கடமையையே தம்
உடமையாய் - எம்
மடமை மாற்ற
மண்ணில் உதித்த
மாண்புமிகு ஆசான்களை,
 உற்ற மண்
நெற்றியில் பட பாதம்
பற்றித் தொழுகின்றோம் - கண்களில்
ஒற்றி எழுகின்றோம்.
ஆதி ஆசான்
அம்மை அப்பரை
இம்மை மறுமைக்கும்
எம்மை விட்டு நீங்கா
நினைவுகளுடன் ..
நீள் கரம் கூப்பி ..
நித்தம் வணங்குகிறோம்.
கல்லூரிக் கடலின்
கலங்கரை விளக்க
கண்ணிய ஆசான்களுக்கும்
கரை தெரியா ..
நுரை அடங்கா …
நித்திய உலகியலில்
அத்தியாயங்கள் பல விரித்து
அனுபவப் பாடங்களை
அள்ளித் தந்த
அனைத்து
ஆசான்களுக்கும்
அன்புநிறை
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

உடல் வலிமை

உடல் வலிமை வேண்டி ….
கடல் கடந்து வந்த
உடற்பயிற்சி கூடங்கள்
நடைப் பயிற்சி எந்திரங்கள்
ஏராளம் எக்கச்சக்கம்.
தாராளமயச் சந்தைப்
பொருட் குவிப்பில் ..
உடல் வலிமை ஏற்ற
மடல் விரிக்கும்
புரதப் பொடிகளின் வரவு ..
விளம்பரங்கள் ..
வியாபார வலை விரிப்பு
வாலிப உலகிற்கு.
சாலையோர உணவு தவிர்த்து
மாலை சிறிது உடற்பயிற்சி செய்து
வேளைக்கு உணவு உண்டு
உறக்கத்தை உணர்ந்தேற்று
மனப்பயிற்சி உயிர்பயிற்சி
தினம் சிறிது ஏற்க
உடல் வலிமை
கெடல் எங்கே நேரும்?
போலிப் பொருள் எந்திரங்கள்
புற்றீசலாய் பெருகி வரும் இந்நாளில்
புத்திக் கொண்டு ஆராய்ந்து - வியாபார
யுக்தியினை முறியடிப்போம்.
வணிக நோக்கு
சத்துபானம் சற்றே புறம் தள்ளி
பாரம்பரிய உணவுப் பொருள்
சமைத்துண்போம் ..
உடல் வலிமை நமதாகும்.

ஓர் பாதி கண்..இரு இதயம்

ஓர் பாதி கண் மூடி ..
இரு இதயம்
முத்தமிழாய் முகிழ்ந்திருக்க ..
நால்வேதம் நலம் பெருக்க ..
ஐம்பூதம் ..சாட்சியாக…
அறுசுவையால் ..அகம் ..மணக்க..
ஏழடிகள் இணை நடந்து …
எட்டுத் திக்கும் கொட்டி முழக்க..
ஏழு சுரங்களாய் யாழினிக்க - நல்
அறுகுணங்கள் சீராய்க் கொண்டு
ஐம்பெரும்காப்பியமாய் அகிலம் போற்ற
நான்கு பேர் நல்லாசியிலே இருவர்
மூன்றாய் முத்தென முகிழ - கண்மணி
இருவர் கருத்தாய் வளர ..- நல்ல
ஓர் பல்கலைக்கழகமாய் திகழ்த்திடுமே.

கடவுளின் தூரிகையில்

கண்கள் …
கடவுளின் தூரிகையில் 
கருப்பு வெள்ளை பிரிஸ்மா!

சங்கடமான சமையலை விட்டு

சங்கடமான சமையலை விட்டு
சங்கீதம் பால் சென்ற
செங்கமலவல்லியையும் 
சின்ன வெங்காயத்துடன்
சிறை பிடித்துவிட்டீரே !
ரெங்கமன்னாருக்கும் தினம்
சின்ன வெங்காய சட்னியே
சிறக்குமோ? மிக மணக்குமோ?
reflection on ##padithathil rasithathu
சிற்றம் சிறுகாலை சின்ன வெங்காயம் நறுக்காமல்
போகேன். அன்றன்றைக்கு
அவன்தன்னோடு பறைகொள்வேன்).

கார்மேகக் கண்ணிரண்டே...

கார்மேகக் கண்ணிரண்டே !
கடவுள் வரைந்த கருப்பு வெள்ளை காவியமே !
கட்டுண்டேன் என்னருமை ஓவியமே !
காரோட்டி நான் செல்லும் வேளையிலே
கருந்துளியாய் காகமொன்று
துணுக்கு மேகமாய் மேல் வானில் மிதந்து செல்ல
துணைக்கு வெண்நாரைக் கூட்டமொன்று
இணையாக இசைந்து வர - உன்
கண்ணின் வெண்படலம் அதனுள்ளே
மின்மினியாம் கண்மணியே காட்சிக் கண்டேன்.
வானத்து தேவதையோ? வனத்திற்கோர் தேவதையோ?
ஊனற்று உயிரற்று உழன்ற என் சீவனுக்கோர்
வான்மழையும் உன் விழியே !
நான் நனையாக் கருங்குடையும் உன் இமையே !
மென்மேலும் நான் விரிய நன்கொடையானாய்.
கண்ணளவு தெரியாது கால் தடுக்கி விழுந்துவிட்டேன்
காதல் என்னும் அமுதூற்றி
விண்ணளவு விரித்துவிட்டாய்...என் உயிரை.
வீணாகப் போயிருப்பேன்..வீணை ஆக்கிவிட்டாய்
காணாமல் போயிருப்பேன் ..கானம் ஆக்கிவிட்டாய்.
மண்ணாளும் மன்னவரும் - இசை
பண்ணாளும் பாரதியும் தன் காதல்
 கனியமுதைக் ‘கண்ணம்மா’ என்றே தான்
களிப்புற்று கவின் மொழியில்
குயிலெனவே கூவினரோ?
செய்நன்றி கொல்லாத செம்மலன்றோ மேன்மக்கள்…
கண்மலரை காமனுமே அம்பாக்கி
 கடி நெஞ்சை துளைத்ததனில்
காதல் பயிர் செய்துவிட்டான்..
காதலவன் கண்மணியை ..’கண் அம்மா’ என்றழைத்தே
கனிந்த நல் நன்றிதனை கமலக்கண்ணிற்கு கவிழ்த்திட்டான்.
என் பிம்பம் உன் விழியில்
என் உயிரும் உன் வழியில்
கண் வழியே நுழைந்த நான்
கருத்துவரை சென்றதையும் உன்
கன்னம் சிவப்பேற்றி - பிற
காளைக்கோர் இடமில்லை இந்நெஞ்சில்
என்றேதான் சொல்லாமல் சொல்லியதோ.
நீ குழலூதி…
ஆநிரை மயக்கி..
ஆயர் மகள் மயக்கி..
பேயர் எமை மயக்கத் தோற்று..
நீ குழலாகி …
நீ குழல் ஆகி
நீ(யூ) ..குழல்(டியூப் )..ஆகி
நிம்மதியாய் நிறைவுற்றாயோ?
 உண்மை நட்பு
உயிர்நட்பு உயர்நட்பு ஓராயிரம் - இவ்
உலகில் உண்டு பாடிடுவோம் பாவாயிரம்.
கண்ணனுண்டு கர்ணனுண்டு அவ்வையுண்டு அதியனுண்டு.
கற்பெனவே காத்திட்ட கதைகள் நமக்குண்டு.
ஆணும் பெண்ணும் அந்நிய அண்டவாசி
அப்படியோர் நிலையினிலே அவ்வையும் அதியனும்
அருந்தமிழால் அன்பாகி கண்ணியம் கூட்டி
நட்பென்னும் நாட்டினை ஏட்டினில் ஏற்றினர்.
நாட்டமிகு நல்நட்புக்கள் நாலு கோடியிங்கு
தேட்டமாய் இருந்தாலும் நாலு பேருக்கு
நடுங்கி ஆழக்குழி தோண்டி புதைக்கும்
நடப்பும் இங்குண்டு..அகண்ட பார்வை
நாட்புறம் சுற்றி விசாலமாக்கச் சொன்ன
பாவேந்தர் பாடலை நட்புநாட்டுப் பண்ணாய்
பாவித்து தேடலை நாம் கொள்வோம் - அப்
பாவி இளையர்கள் அரிவாளை வெறுப்போம்.
உள்ளம் விரித்து உண்மை பரப்பி
கள்ளம் தவிர்த்து பெண்மைப் போற்றினால்
கண்ணிய நட்பு களங்கப்படாது - ஆண்
பெண்ணிய நட்பில் கலக்கம் வராது.
சின்னதாய் சிறுத்த நம்முலகம் - பல
வண்ணமாய் உதித்த வலையுலகால் - இனிய
முகநூல் கொண்டு முப்பதாண்டு முன்
அகத்தில் பூட்டிய நட்பை மீட்டோம்.
அகவை மறந்தோம் ஆர்ப்பரித்தோம் - அன்பு
ஆழிக்கடலில் முத்தெடுக்கப் போய் மூச்சடைத்து
மூழ்கி நின்றோம் முத்தல்ல முத்துமாலையன்றோ
சொத்தாகக் கிடைக்கப் பெற்றோம்..சொல்லுண்டோ
பித்தாகி நிற்கின்றோம் முத்தான முதல்வணக்கம்
சத்தான முகநூலுக்கும் குறுஞ்செயலி சேவைக்கும்.
மத்தாப்பு தோரணங்கள் கித்தாப்பு சரவெடிகள்
மொத்தமது எம் நன்றி நவிலலன்றோ ?
நரைக்கு இனி திரை இல்லை
உரத்த ஓர் உறுதி
வார இறுதி விருந்துக்கோர் 
பொருத்தமான போன் கால் வரும்வரை ..:)
# நடுவயது நாயகங்கள்(நியாயங்கள்..:) )
இடப்பக்க மூளையர்க்கு வாழ்வு ஓர் ஓட்டம்
வலப்பக்க மூளையர்க்கு வாழ்வு தேரோட்டம்
இதுவும் ஓர் ஓட்டம்தான் - ஆயின் 
ரசித்து ருசித்து பூச்சூட்டி பாராட்டி - மனம்
கசிந்து ..காலத்தை கணம் கணமாய்
கரைந்துணரும் மெது ஓட்டம்.
தலைத் தெறிக்க ஓடுவதில்லை தேரோட்டம்.
குடம் நிறைக்க தம்பிடிகள் காரோட்டத்தால்…
தடம் சுவைக்க தப்படிகள் தேரோட்டத்தில்
காரோட்டம் தேரோட்டம் ...
கரம் இணைந்தால்…. - வாழ்வு
களியாட்டம்.
விழி தாண்டும் வினோதம் வித்தகம்
அவன் இடத்தில் உனை நிறுத்தி
அவன் பார்வை நீ பொருத்தி
விழி தாண்டி கருத்து காண்.
புகைவண்டி மக்கள் பொருட்கள் மட்டுமா
வகைவகையாய் இடம் நகர்த்தும் - மிக
சுவைசுவையாய் வாழ்பதிவுகள் பல கொடுக்கும்.
வெளிநாட்டு புகைவண்டி நிலைய நிகழ்விதுவும்.
எள்ளிட்டால் எள்ளெடுக்க இயலாத பெருங்கூட்டம்
கொள்ளை இன்பமாய் குதித்தாடும் குரங்கினமாய்
வெள்ளை உள்ளமாய் சள்ளைமிக தந்து - உண்டு
இல்லையென ஆட்டத்தில் நான்ககவை இரட்டையர்.
களிப்பாக காண்பதெல்லாம் கணநேர மாற்றம்தான்
களைப்பான கூட்டம் கடுப்பாக தொடங்கிற்று.
சலிப்பான தந்தையோ தன்னுலகில் தலைகவிழ்ந்து
தாளாத மாதொருவர் வாளாவிருக்கவில்லை.
மாளாத கூட்டத்தில் மற்றோர்க்கு தீராத
தொல்லைதரும் உம்மக்கள் செயல் கண்டு
கேளாமல் கவிழ்தலையாய் பாராமல் - குழந்தை
வளர்ப்பென்ன செய்தீரோ சொல்லம்பை சொடுக்கிவிட்டார் .
ஏலாதோ..உம்மக்கள் குறும்படக்க? ..பெரும்பாடாய்
உள்ளதென்றார்..கணநேரம் காட்சி உறைந்ததங்கே.
ஏலவில்லை என்அம்மா மனம் தாளவில்லை
கேள்விக்கான விடை தேடி கலங்கியுள்ளேன்.
வளர்ப்பதெப்படி? வெறும் சடமாய் நிற்கின்றேன்
பெற்றவளை சவமாக காண்பித்து பிள்ளைகளை
அள்ளி வரும் அன்புத்தந்தையம்மா நான்
வளர்ப்பதெப்படி குழம்பி நிற்கிறேன்?
உருகியோடின ஓராயிரம் இதயங்கள்
ஓரிருநொடியில் ஒட்டுமொத்தமாய்
விழி தாண்டும்போது ..களி அன்பு
மொழி தூண்டியது இதை நினைக்கையிலே….
காலை நேரம் 
கண்ணழுத்தும் தூக்கம் 
கணமாகிப் போன 
கால்மணி நேரம்.
என் மகள் எனக்கு தாயானாள்�
பெத்ததோ பலகோடி நட்டபட்டதோ சில லச்சம்
பழுதாகி போனதையே பாவிமனம் மறக்கலேயே
விழுதாகி வேர்விட்ட மரம் பொழச்சுடுமே!
செடியாகி வந்தமரம் வெறும் கொடியாகி
ஆணுமில்ல பெண்ணுமில்ல அர்த்தநாரியுமா ஆயிருச்சே
பாரதம்னு சொன்னாக வாழ்க்கையொரு போராச்சே
உடன்பொறந்தா கடனறுக்க ஓவியமா வந்தமக
தமிழ்நாடு பேராச்சு உலகமெல்லாம் புகழாச்சு.
அரவானைத்தான் வரித்து அன்புமகன் உருமாற
அர்ச்சனைகள் பலகோடி ஊர் வாயில்
அதை வடிக்க ஆயிரங்கவி போதா.
அண்ணன் தம்பி தங்கிடுவர் அக்கரையில்.
அல்லலுறும் பெற்றோரோ அக்கறையில் .
அன்றாடக் குடிகாரன் அவனுக்கோர் வீடுண்டு.
அல்லாடும் அரவானின் மனைவிக்கோர் நாதியில்லை.
அன்பில்லை வம்புண்டு பாவம் வாழத்தெம்பில்லை.
தாயுள்ளம் தவிக்கையிலே பாய்வெள்ளமாய்
வாய்ப்புக்களை காய்ப்புற்ற திருநங்கையர்க்கு - வாழ்வு
நலத்திட்டங்களாய் தந்திட்ட தமிழ் மகளே.
உலகநாடுகள் செய்யாதது செய்துநீ உயர்ந்திட்டாய்.
கல்லூரிக்கதவு திறந்தாய் ..கல்வியுதவி தந்தாய்.
வேலைவாய்ப்பு தந்தாய் நலவாரியம் அமைத்தாய்.
ரேவதி பெண்ஓட்டுநரானார் உரிமம் பெற்றார்.
ரோஜாவாக சின்னத்திரையில் மின்னச் செய்தாய்.
மனம் விட்டு பேச “சகோதரி “மனசு “ “சிருஷ்டி”
பெற்று 24மணிநேர இலவசசேவை தந்தாய்.
கற்பகா..கல்கி..ஸ்வப்னா..உச்சியிலேற்றினாய் .
ரேவதி சரிதம் கல்லூரி பாடமாக்கினாய்.
உணர்வு ஊனமான என்மக்கள் நிலை
உயர் ஞானமாக்கினையே என்சேயே தமிழகமே
நானுனக்கு தாயாக என்ன தவம்செய்தேனோ?
நீயென்னை சேயாக்கி தாலாட்டி விட்டனையே!
தலைப்பு: பெண் அகராதியில் ஆண்…..
பண்பான ஆணென்றும் பெண்மனது வென்றிடுவான்.
பண்பான ஆண்மையிலே அன்பான உளமுண்டு.
அசையாத ஒழுக்குண்டு நல்திறனுண்டு - உளம்
பிசையாத இன்சொலல் உண்டு.
மெய்யன் என்றால் திளைத்திடுவாள்
பொய்யன் என்றால் பொங்கிடுவாள் - அன்பு
ஆணவனை அகத்தினிலே இருத்திடுவாள்.
ஆணவங்கள் காட்டிட்டால் அழுதிடுவாள் உளத்தினிலே.
வருங்கால வாழ்விடத்தில் பெரும்பங்கை ஆற்றிடவே
கரும்புள்ளம் கொண்டேதான் வந்திடுவர் பெண்மக்கள்
பெருங்காலம் ஆனாலும் அவளுக்கோர் மதிப்பில்லை
கடுங்காயம் கொடுத்திடுமே கள்ளமது துளிர்த்திடுமே.
கணவனவன் கன்னிமனம் அறிந்திடல் வேணும்
பெண்ணிவளைப் பெற்றவரும் உற்றவரும்
கண்ணனெவே மதித்திடல் வேணும் - பெண்ணவளே
ஆணினத்தை கேட்பதுவும் இதுவேஅன்றோ?
இதுவொன்று நடந்திட்டால் வேறொன்று உலகில்
பெரிதென்று எண்ணிட மாட்டாள் - தன்
உரிமைக் கணவனையே காலத்தின் நாயகனாய்
வரித்திடுவாள் பெண்பார்வை ஆண்பாலே இதுவன்றோ?
‘சகியாக தனைக் காணும் இணைதன்னை’
சுகமான வரமாக பெண்மை இனங்காணும்.
‘சுகதுக்கம் தனியில்லை நமக்கினி’ என்னும்
பகிர்கின்ற ஆணினமே பெண்ணவளின் பேராசை.
அற்பர்கள் அணுகாமல் அன்பவளைக் காத்திடவே
அடக்காதே சீறலுமாய் ..அச்சமகற்றிவிடு அன்புப்பீறலினால்.
ஆணுலக அச்சங்கள் உன்பதற்ற எச்சங்கள்
அவளறியா மிச்சங்கள் அவ்வறிவு ஊட்டிவிடு.
உன் மௌனம் உனக்குயிர்ப்பு
உன் மௌனம் அவள் தவிப்பு
மோனத்தின் பொருள் உணர்த்து - அவள்
வானத்தின் அருள் உதிர்ப்பாள்.
கவியுலகப் பூஞ்சோலையின் 24-8-16 ஆம் நாளான போட்டி கவிதையின் வெற்றியாளர் #கவிஞர்_Raji_Vanchi அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்
தலைப்பு: # பருவம்
பட்டுப் பாவாடை குட்டி நிலா
பட்டு தாவணியுடன் பௌர்ணமியாய் ….பருவம்!
சுட்டிப் பையன் அவன் - இனிப்புக்
கட்டி விலக்கி
வெட்டியாய் ஊர் சுற்றினால்…..பருவம் !
மொட்டு விரியும் புதுமெட்டு போடும் ….பருவம் !
எட்டு ஈரெட்டாகி இளஞ்சிட்டாகிய ..பருவம் !
ஈரெட்டு மூவெட்டுக்கு முனையும் ..
கல்வெட்டுக் காதல் கனியும் பருவம் !
சேய்க்கெதிரி தாயும் தந்தையுமே
வாய் கிழியும் தாய் உருகும் .
மெய் ஒளிரும் பொய் பெருகும்
மூவெட்டு முத்தெடுக்கும் தம்முயிரை
நகைப்பெட்டி முடிவெட்டி மடிகட்டிய
நகை நாட்கள் ஓடி ...
பால்புட்டி கைப்பெட்டி
பிள்ளைகுட்டி…... பிழைப்பு மாறும்.
அடிபட்டு மிதிபட்டு அன்றாடம் அல்லலுற்று
படிகட்டு பலவேறி (மக்கட்)கல்வி கைதியாவர்.
மட்டுப்படா மனக்கனவுகள் மட்டும்
தட்டுத் தடுமாறும் தலை தெறிக்கும் ஓட்டத்தில்.
Image may contain: 1 person
கண்ணா...மணிவண்ணா.
கண்ணில் என்ன நீர்க்கோலம்
மண்ணை தின்ற போது - அன்னை யசோதை 
அதட்டி.....நின்ற போது
நீ வடித்த கார்காலமா?
நீ நடித்த மாய்மாலமா?
Thank you shrikalyan for posting this cute krishna
தலைப்பு: தென்றல் ..தீண்டி…
நிறைவு: புன்னகைக்காதோ பூக்கள்
தென்றல் ..தீண்டி…
மன்றம் வந்த மலர்க்கூட்டம்…
சென்ற இடம் சொல்வாயோ ?
அன்றாட வேலையிலும்…
நன்றாக உடை உடுத்தி..
செண்டாக மல்லிகையை
வண்டாடும் கூந்தலிலே ..
திண்டாக.. சூடிவிடும் - கற்
கண்டான கன்னியிடம் சென்றனையோ?
திண்டாடும் கூட்டமிது
சென்றோடும் சள்ளை என
கன்றோடும் கன்னியோடும் - திரு
வென்றாக வேண்டுமென
குன்றேறிக் குடியிருக்கும் - மா
மன்றோனாம் முகம் காண
நின்றே தான் கால் கடுக்க
திண்டாடும் கூட்டமிது - நீயோ
திண்தோளன் தோளினையே
நின் வயமாக்கி கொண்டிடவே
தோமாலை சேவையேற்று
பாமாலை கேட்டிடவே
மாமாயன் மலரடியைச் சேர்ந்தனையோ?
ஓர் நாளே வாழ்பயணம்
சீராக தென்றலெனும்
தேர் ஏறி திகழ்மணமாய்
பேர் பெற்றாய்...பூமகளே …- உடன்
நாருக்கும் மணம் தந்தாய்.
ஒற்றை நாள் பூ வாழ்வில்
எத்தனை தான் மாற்றமிங்கே
புன்னகைக்காதோ பூக்கள்.
மயிலிறகால்….நீ
மனம் தடவ….
மயிலிறகின் மயக்கு
நீலமும் பசுமையும்
வானாக புல்லாக விரிய..
தினம் ஒரு மென்
கனவு கண்டேன் ..
கண்டது கனவென்பதால்..
விண்டது போலும்…
சென்றது செல்லட்டும்..- மனம்
வென்றது நினைக்கட்டும் .
வலியாய்...வடுவாய்...
நின்றது வலிக்கும்..- மனம்
மென்றதை மறைக்கும் ..
மென்று ‘அதை’ மறைக்கும்
வடு நீக்க வரும் மருந்தாய்
மனம் விரும்புதே …
மயிலிறகு…
மனத்தில் பாலுண்டோ ?
ஆணென்ன பெண்ணென்ன ..?
மென் மனம் வன் மனம் இரண்டே தானன்றோ?
மென் மனம் …...நுண் மனம்
வன் மனம் …..திண் மனம்.
வன் மனம் வடு ஆக்கும்.
மென் மனம் வடுவாகும் - மன
மன்றம் தேடுது மயிலிறகு…
தென்றல் துணையோடு இதமாக…
Image may contain: text
வெண்ணையாய் விழுங்குவது
உன்னைத்தானே இவ்
உண்மை நீ அறிவாயோ?
விண்ணை முட்டும்
விசுவரூபம் எடுப்பேன்
கண்ணே நான் உன்னை
கவர்ந்திழுக்கும் மாயமது.
கண்ணை காதை மூக்கை கழற்றி வை
விண்ணைத்தாண்டும் ஆசை விதைக்கும் மற்ற
புலனிரண்டை கொஞ்சம் மாற்றி வை.
மாயங்கள் மாற்றிவிடு - புலன்செய்
மாயங்கள் மாற்றிவிடு.
காயங்கள் ஆறிவிடும் - மனக்
காயங்கள் ஆறிவிடும்.
இரும்பு பூட்டைந்தை..போட்டுவிடு.
கரும்பு காட்டினிடை களிறும் நீயன்றோ?
பேரானந்த
கரும்பு காட்டினிடை களிறும் நீயன்றோ?
புலனைந்தை மாற்றி விட்டேன்
பலனும்தான் பார்த்துவிட்டேன்.
புண்ணாகிப்போன புலனை நான்
மண்ணோடு மாய்த்துவிட்டேன் .
மண் உண்ணா மாண்பானேன்.
மண்ணுண்ட மாயனானேன்.
மாசகற்றி..தூசகற்றி...
நீர் நீக்கி .மோர்..நீக்கி
வெண்ணையாய் திரண்டிங்கு வந்துவிடு
வெகு காலம் பசியுண்டு இங்கெனக்கு.
வெண்ணையாய் விழுங்குவது
உன்னைத்தானே இவ்
உண்மை நீ அறிவாயோ?
Version 1 - mandookam and manidan
தத்தக்கா பித்தக்கா தவக்களை
தாவிக் குதிச்சது நிலத்துல
மண்டைய பொளக்குற வெய்யிலுள
மண்டூகம் சுத்தி பாக்குது
குளுகுளு நிழலு ஒன்னு தெரிஞ்சது
பளபள ..பாம்போட படமது
பாவம் மண்டூகம் பாக்கலை
பாம்பு முகத்த நோக்கல
கப்புனு தாவி குந்துச்சு
இப்பனு சொருகுது கண்ணு
'பட்' டுனு போட்டுச்சு ஒன்னு
'சட்'டுனு வேலை டன்னு.
தத்தக்கா பித்தக்கா தவக்களைக்கும்
தத்துபித்து மனுசனுக்கும் ஒரு வார்த்தை
ஷார்ப்பாவே இருந்துக்க நீ
ஷோக்கா நீ ஆடாத.
ஆணவத்தை விட்டிரு நீ
அலெர்ட்டாவே இருந்துக்க நீ
அம்போ னு போகாத .
அத்தனைக்கும் காரணமே
அந்த 'ஈகோ' தான் சொல்லிப்புட்டேன்
version 2 of maandukam and maanudam
கானகத்து மண்டூகம் ..
மடு வகன்று மலை புகுந்தது
கடுவெயிலில் சுடுபட்டு
பைய ஓர் பசுநிழல் தேடி
பைந்நாக படத்தடியே
கையகற்றி கால் விரித்து
மெய் மறந்து கண் சொருக
பைந்நாகம் பாய்ந்து விழுங்கி
பொய் மேக நிழல் சுருட்டி
பொய்கை நாடி புரண்டோட
கானகத்து மண்டூகம்
வானகத்தேகி மறைய
காரணமும் விதியா? சதியா?
இரண்டுமன்று..
மதி கூர்மை
விழிப்பு நிலை
வில்லாக அம்பாக
இவ்விரண்டும் இருந்திட்டால்
விடமான ஆணவ பைந்நாகம்
மானிட மண்டூகத்தை
ஏனடா என நெருங்காது.
சினம் ..சீத்தலைச் சாத்தனாரின்
மனம் கொண்டு பிறர் பிழைக்கு
தனக்கு தானே தரும் 
வனவாச தண்டனை.
Image may contain: outdoor#Rajikavithaigal
அங்கொன்னு இளிக்கிது..ஆந்தைப் போல் முழிக்கிது ..
அலிபாபாவின் ஆரணங்கு பாடல் காட்சி சுழன்றோட..
அடுத்த வீட்டு கூரையில் அசையாத் தவத்தில்
ஆந்தை ..அது அசைவை நோக்கி நாங்கள் 
பேந்த பேந்த முழிக்கிதா? பேசாம இருக்குதா?
மாந்தர் மனம் மாயாத அசைவு ஆவல்.
இரவு நேர வேலைக்கு ஓய்வு நிலையில் இருக்குதா?
கரவு முதல் களை அகற்றி துறவு நிலையில் திளைக்குதா?
அப்படியோர் தவக்கோலம்
அசையாத ஓர் ஆந்தை சுத்தவெளிச் சின்னமா? - மாந்தர்
அசைபோடும் எண்ணம் திசைதோறும் ஓட்டம்.
புகைபோக்கி புத்தனே! - இன்று
மிகையான பொழுதுபோக்கு
வகையான தேநீர்க் கோப்பையோடு.
ஆச்சரிய கணங்கள்..அடுக்கடுக்காய் ஆரம்பம்
பேச்சறியா பாலகன் மடுவிட்டு மலையேறும்
மாமலையாம் ஆண் களிறு அதனருகில் போவது போல்
ஆந்தை பக்கம் அமர ஓர் குட்டிக் குருவி
ஆகாசம் விட்டு இங்கு
ஆபத்தின் அடிமடியில் அறியாத அவதானம்.
பட படப்பு வெகுவாக ..காட்சிகள் மாற்றம்.
சிடுசிடுப்பு சின்னதாய் மனதில் சீற்றம்
சின்னக் குருவிக்கென்ன சித்தமயக்கம்
சின்னாபின்னமாக சிறகடித்து வருவதுமேன்?
சில நொடிகள் சித்திரமாய் நிச்சலனம்
சிறுபயலாய் சில்மிஷங்கள் சிந்தியது சிறுகுருவி.
சிறுபுயலாய் சிறகடித்து சீண்டியது
அசையாத ஆனந்த யோகி ஆந்தையாரை.
நிச்சலனம் ..நிமிர்ந்தது ..
பெருவிழி விரித்தது...
"குருவி குஸ்கா ரெடி"
குறுமனம் கூவியது.
குருவி..குட்டிக் குருவி ..எட்டி போ..
அஞ்சியது மனம் ..கெஞ்சியது அக்கணம்.
உருவு கண்டு எள்ளுவதே
கருமுதல் வந்த கலை மாந்தர்க்கு.
குதித்து குதித்து எம்பியது குருவி
கொத்த கொத்த தாவியது சிறு அலகால்.
ஆந்தை ஆரவாரத்திற்கு அசையவில்லை.
அக்குருவியோ ஆர்ப்பாட்டத்தை நிறுத்தவில்லை.
முப்பது நொடியில் முப்பரிமாணக் காட்சி
முழுநீளப்படமாக முகட்டின்மேல்
முழுவீச்சில் வாழ்வா? சாவா?
முப்பத்தியோராவது நொடி.
'தப்' 'தப்' தட்டியது தன் சிறகு
அரைமணி நேரம் அசையா ஆந்தை.
அடுத்து வரும் 'கபளீகர' காட்சியை
கடுத்து நோக்க கடு மனம் இல்லை.
நடப்பதென்ன நாடகமா ?
அடுத்த ஐந்து நொடி அடுக்கடுக்காய்
அதிரடித் தாக்குதல் தந்தது ..ஆந்தை அல்ல..குருவி.
தத்தி தத்தி நோக்குதல் - சிறுமூக்கால்
கொத்தி கொத்தி தாக்குதல். .
ஆறாம் நொடி ..இயற்கையின் அதிசய விதி
படபடத்த..சிறகாய்..
இடம் விட்டு பெயர்ந்த ஆந்தை..
விடாமல் கீச்சிட்டு தொடர்ந்த குருவி.
தாய்க்குருவி ஒன்று தன்
சேய் காக்க பேய்க்குருவியானதோ?
தந்தைக்குருவி தான் தன்
விந்தைமிகு வீரம் காட்டி
நைந்த தன் குட்டி காத்ததோ?
ஆசான் கலாமிற்கோர் அஞ்சலி
விண்ணில் விஞ்ஞானம் விதைத்தீர்.
மண்'ஞானம்' மாற்ற
மண்ணுடல் பூமிக்கு ஈந்தீரோ?
வாழ்க நீ எம்மான்.

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...