Friday, April 28, 2017

விழி தாண்டும் வினோதம் வித்தகம்
அவன் இடத்தில் உனை நிறுத்தி
அவன் பார்வை நீ பொருத்தி
விழி தாண்டி கருத்து காண்.
புகைவண்டி மக்கள் பொருட்கள் மட்டுமா
வகைவகையாய் இடம் நகர்த்தும் - மிக
சுவைசுவையாய் வாழ்பதிவுகள் பல கொடுக்கும்.
வெளிநாட்டு புகைவண்டி நிலைய நிகழ்விதுவும்.
எள்ளிட்டால் எள்ளெடுக்க இயலாத பெருங்கூட்டம்
கொள்ளை இன்பமாய் குதித்தாடும் குரங்கினமாய்
வெள்ளை உள்ளமாய் சள்ளைமிக தந்து - உண்டு
இல்லையென ஆட்டத்தில் நான்ககவை இரட்டையர்.
களிப்பாக காண்பதெல்லாம் கணநேர மாற்றம்தான்
களைப்பான கூட்டம் கடுப்பாக தொடங்கிற்று.
சலிப்பான தந்தையோ தன்னுலகில் தலைகவிழ்ந்து
தாளாத மாதொருவர் வாளாவிருக்கவில்லை.
மாளாத கூட்டத்தில் மற்றோர்க்கு தீராத
தொல்லைதரும் உம்மக்கள் செயல் கண்டு
கேளாமல் கவிழ்தலையாய் பாராமல் - குழந்தை
வளர்ப்பென்ன செய்தீரோ சொல்லம்பை சொடுக்கிவிட்டார் .
ஏலாதோ..உம்மக்கள் குறும்படக்க? ..பெரும்பாடாய்
உள்ளதென்றார்..கணநேரம் காட்சி உறைந்ததங்கே.
ஏலவில்லை என்அம்மா மனம் தாளவில்லை
கேள்விக்கான விடை தேடி கலங்கியுள்ளேன்.
வளர்ப்பதெப்படி? வெறும் சடமாய் நிற்கின்றேன்
பெற்றவளை சவமாக காண்பித்து பிள்ளைகளை
அள்ளி வரும் அன்புத்தந்தையம்மா நான்
வளர்ப்பதெப்படி குழம்பி நிற்கிறேன்?
உருகியோடின ஓராயிரம் இதயங்கள்
ஓரிருநொடியில் ஒட்டுமொத்தமாய்
விழி தாண்டும்போது ..களி அன்பு
மொழி தூண்டியது இதை நினைக்கையிலே….

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...