ஆள் அரவம் இல்லாத அடர்ந்த மூங்கில் காடு. காற்றின் சத்தமும் வேகமும் கலங்க அடிக்கிறது.*கழைக்கூத்தாடிகளின் பறை ஓசைப் போல் கேட்கிறது.
கொள்ளையர்கள் நிரம்பிய பாலை நிலம்.உள்ளம் கவர்ந்தவனுடன் ஊரை விட்டு செல்கிறாள்.கண்டு மனம் பதைக்கும் ஊராரின் குரலாக ஒலிக்கும் குறுந்தொகைப்பாடல் #7. .
மூங்கில் காட்டோரம்
அத்திப்பூத்தாற்போல் ஆளரவம்
வெண் வாகை நெற்றொடு கைகோர்த்து
காற்று அறையும் பறையோசை
கயிறு நடந்து கூத்தாடி
வயிறு வளர்க்கும் பறையென
**கடிமணம் காணா காற்சிலம்பினள்
துடியிடையாள் மெல்லிய
தொடி கரத்தால்
பிடித்து நடந்தனள்
கழலணி வில்லோன் விரலினை
நிழலெனத் தொடர்ந்து
மெல்லடி சிலம்பொலிக்க
செல்லுமிடம் ஏதோ
புல்லர் நிறை புறமன்றோ ?
(பாடியவர்: பெரும்பதுமனார்)
குறுந்தொகைப்பாடல் #7.
வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே.
*(கயிற்றில் நடந்து பிழைப்பு நடத்தும் கழைக்கூத்தாடிகளின் வாழ்வைப் போல இவர்களின் வாழ்க்கை பயணம் பாலைநிலத்தில் ஆபத்துகள் நிறைந்ததாக உள்ளது என்பது உள்ளடக்கம்)
**கன்னிப்பெண்கள் அணிந்திருக்கும் காற்சிலம்பை திருமணத்திற்கு முன் அகற்றிவிடும் பழக்கமுள்ளதாக சங்க இலக்கிய குறிப்புகள் கூறுகின்றன.( அப்படியானால் சிலப்பதிகாரத்தில் மணமான பெண்ணாகிய கண்ணகியின் காற்சிலம்பு பற்றிய கேள்வி வருகிறதே....கால வேறுபாடுகள் காரணமாக சமூக வழக்கங்கள் மாறியிருக்குமோ..தமிழறிஞர்களிடம் இந்த கேள்வியை விட்டு விடுவோம்) மணமாகாது ஊரை விட்டு செல்லும் இளம் பெண்களின் அன்னையர்களுக்கு தம் பெண்களின் காற்சிலம்பை கழற்றும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது என்று சில பாடல்களின் குறிப்பு உள்ளது.
நன்றி: முனைவர் பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com
No comments:
Post a Comment