Saturday, May 27, 2017

வெண் துகிலாய்... குறுந்தொகை #5

வெண் துகிலாய்
தண் முகிலும் தாலாட்ட
வெண்மதியும் தலையாட்டி
மென்னுறக்கம் கொண்டிட
பின்னிரவு பனிநேரம்
கண்மணியின் நிழலாமே  
சின்னதொரு தோழியுமே  
பின்னமாக துஞ்சல் கண்டு
மென்குரலில் விசும்ப கேட்டு
என்னவென தலை உயர்த்த
கண்களிரு தாமரையாய்
கண்மைசூழ் கருந்தடாகத்துள்
உண்மை கூறி கலங்கி நிற்க
வெண்கடல் திவலை மோதி
இன்னிழற் பெருக்கி
புன்னை தான் அரும்ப
தண்ணிழல் உறங்கு குருகு
மண்ணிடை மலர்ந்த
மன்னவன் சென்றனன்
கன்னியை மறந்து - உடன்
கண்ணிமை உறக்கம் சுமந்து ....

அதுகொல் தோழி” எனத் தொடங்கும் #5.குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக்  கொண்டு எழுதப்பட்டது.
பாடியவர்: நரிவெரூஉத்தலையார்

தன்னிடத்தில் தங்கியிருக்கும் குருகுகள் உறங்குவதற்கேற்ற இனிய நிழலைத் தரும் புன்னைமரங்களை, கரையை மோதும் அலைகளிலிருந்து சிதறும் இனிய நீர்த்துளிகள் மலரச் செய்கின்றன. அத்தகைய நெய்தல் நிலத்தின் தலைவன் என்னைப் பிரிந்ததால், பல இதழ்களை உடைய தாமரை மலரைப் போன்ற என்னுடைய மை தீட்டிய கண்களால் தூங்க முடியவில்லை.தோழி!

நெய்தல் திணை

#5.குறுந்தொகை
அதுகொல் தோழி காம நோயே
வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே.


நன்றி: முனைவர்.பிரபாகரன்

nallakurunthogai.blogspot.com

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...