குறுந்தொகை #12
எறும்பு புற்றென
குறுஞ்சுனை ஏங்கி
கரும்பாறைத் தணலில்
இரும்பு கோல் தீட்டும்
மருட்டு விழி வேடர்
திருட்டுமே தீயாய் கண்டு
அருங்கவலை * வழி
வரும் பாதை - வஞ்சி
விரும்பிடா பாலையிலே
திரும்புமிடமெலாம் ..உளம்
அரும்பிய அன்பர்க்கு
பெரும்பாடாய் பொழுதோட ..
வருத்திய பாதையெண்ணி
கருத்த சூழ் மேகமென
சிறுத்தது மென் மனமே
நொறுக்கும் இடியென ஒலித்து
விரும்பியவன் தனை எண்ணி
பொருமியவளென
பொருத்தமிலா பல கூறி
வறுத்திடும் வன்மொழி ஊரே !
* - பல பிரிவுகளாக பிரிந்து( குழப்பமான )செல்லக்கூடிய பாதை.
“ எறும்பி யளையிற் குறும்பல் சுனைய” எனத் தொடங்கும் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட #12.குறுந்தொகைப் பாடல்.
பாடியவர்:ஓதலாந்தையார்.
பொருளீட்ட சென்ற தலைவனின் பிரிவு ஒரு பக்கம் வாட்ட..அவன் கடந்து செல்லும் பாலை வழியில் உள்ள ஆபத்துக்களை எண்ணி எண்ணி மனம் பதைக்கும் தலைவி. எறும்பு புற்று போல் குறுகிய சிறு சுனையில் நீரருந்தி, கள்வர்களும் வேடர்களும் தங்கள் கூரிய ஆயுதங்களை வெப்பத்தால் கொதிக்கும் பாலைநில பாறைகளில் தீட்டிக் கொண்டு இருப்பர்.அவர்களால் ஏதேனும் ஆபத்து வருமோ என் அஞ்சுகிறாள்.
செல்லும் பாதையோ பல்வேறு கிளைகளாக பிரிந்து பிரிந்து சென்று குழப்பம் தரும் வகையில் அமைந்திருக்கும்.தலைவன் பாதை அறியாது மாறி தடுமாறி விடுவானோ என்று அவள் மனம் புலம்பி தவிக்கிறது. இதையெல்லாம் அறியாத ஊர்மக்கள் அவள், அவன் பிரிவை எண்ணி மட்டும் வருந்துவதாக ஆரவாரமாக பேசி என் மனதை வாட்டுகின்றனர் எனக் கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
படங்கள்(நன்றி):
Wikipedia.com
நன்றி: முனைவர் பிரபாகரன்
nallakurunthogai.com
எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவர் சென்ற ஆறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.
No comments:
Post a Comment