#அகம்400#2
#கதை#2
நகரும் நிலா
முகில் முகில் என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த மாதவி..வார இறுதியின் கடைசி சொட்டு தூக்கத்தை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருந்தவனை பார்த்து “ உனக்கு எல்லாமே நினைக்கறதுக்கு முன்னாடி கிடைச்சுருது அதுனால சொகுசா நீ தூங்குற “ என்றவாறே அருகில் இருந்த தலையணை அவன் மேல் எறிந்தாள்.
திடுக்கிட்டு எழுந்த முகில் ..’என்னாச்சு இன்னிக்கி என்ன கூத்தடிக்கப் போற ..என்ன சொல்லி அனுப்பியிருக்கா என் வருங்கால மனைவி என்று சிரித்தான்.
‘ கூத்தா ..நிஜமாவே கூத்து தான் நீ மொதல்ல போயி பல் விளக்கிட்டு உங்கம்மா கிட்ட உனக்கும் எனக்கும் காபி வாங்கிட்டு வா ..டிசம்பர் குளிர்ல பனி கொட்டி கிடக்குன்னு பார்க்காம உனக்காக 40 மைல் கார் ஓட்டிட்டு வந்திருக்கேன் ..மொதல்ல காபி அப்புறம் தூது செய்தி .என்றாள்.
ஆவி பறக்கும் காபியுடன் எதிரில் நின்ற முகில் ஆவலாக மாதவியின் முகத்தை பார்த்தான். தன்னுயிர் காதலி பூவையின் தோழி மாதவி. இருவருக்கும் மிகுந்த நம்பிக்கையான தூதும் அவளே. தொழில் நுட்பமே தூதாக இருக்கும் நவீன உலகில் இன்னும் சில நுண்ணிய உணர்வுகளுக்கு இந்த மாதிரி தோழமைகள் தூதாக போவது நடக்கிறது என்பதற்கு சான்று தான் மாதவி.
பூவையின் அம்மாவின் வீடு மிகுந்த செல்வம் உடையது. அப்பாவின் குடும்பமோ மிக பெரியது செல்வாக்கும் கட்டுக்கோப்பும் உடையது.
முகில் பொறுமையிழந்து மாதவியை பார்த்தான். அவளோ, கையிலிருந்த காபியை ரசித்து குடித்துக் கொண்டே ,’’கூத்துன்னு சொன்னியா நேத்து நான் கூத்துப்பட்டறை நடத்திய கூத்து ஒன்னு பார்த்தேன் அதை மொதல்ல கேளு ..என்றாள் “ நீ பூவை என்ன சொல்லி அனுப்பினான்னு சொல்லிட்டு கூத்துப்பட்டறை பற்றி பேசேன் “பரிதாபமாக கெஞ்சினான் முகில்.
“நான் சொல்ல வந்த விஷயமே அதுல தான இருக்கு கேளு “என்று தொடர்ந்தாள் மாதவி.
ஒரு பெரிய்ய்ய மலை அதுல அகல நீளமா செழிப்பா வளர்ந்த வாழையிலையோட வாழைமரம் குலை தள்ளி நிக்குது..அது நிக்கிறது மலை சரிவில, குலையோட பாரம் தாங்காம தொபுக்கடீர்னு வாழைத்தாரு கீழ விழுந்துருச்சு ..விழுந்தது தரையில விழுகாம பக்கத்துல இருந்த சுனையில விழுந்துருச்சு ..அது விழுந்த மாதிரியே பக்கத்துல இருந்த பலாமரத்துலேருந்து பலாப்பழமும் மலையில விழுந்து பலாச்சுளை எல்லாம் தெறிச்சு வாழைப்பழத்து மேல விழுந்துருச்சு ...அப்படியே இரண்டும் ஊறி கிட்டே இருந்ததுல அந்த சுனையில இருந்த தண்ணி இனிப்பா மாறி கொஞ்ச நாளில லேசாக புளிக்க ஆரம்பிச்சு தெளிஞ்சு போய் கிடந்துச்சாம்..
இவ எங்கேருந்து எங்க கதை சொல்றா என்ன சொல்றான்னு புரியவில்லை என்றாலும் பொறுமையாக இருந்தான் முகில். நடுவில் புகுந்தால் வேண்டுமென்றே புதுக்கதை ஆரம்பிப்பது போக்கு காட்டுவாள் என்பதால் ரொம்ப ஆர்வமாய் கேட்பது போல் உட்கார்ந்திருந்தான்.
சுனைத்தண்ணி தெளிவா இனிப்பும் புளிப்பும் கலந்து அருமையான மலை கள்ளு மாதிரி இருக்குதா ..அப்போ அங்க ஒரு குரங்கு தாகமா வருது. சாதாரண தண்ணின்னு நினைச்சு குடிச்சுது..ஆனால் ஊறின தேறல் சுவையில் மயங்கி போய் பக்கத்துல புதர் மாதிரி மண்டியிருந்த பூச்செடியில புரண்டு விழுந்து அப்படியே தூங்கிருச்சு. பக்கத்துல நிக்குற வளர்ந்த சந்தன மரத்தையும் பார்க்கல அதுல இருக்கிற மிளகுக் கொடியையும் பாக்கல ..” என்று மூச்சு விடாமல் பேசிய மாதவி..மூசசு விட நிறுத்திய நொடியில் முகில் கிடைத்த இடைவெளியில் பேசினால் தான் உண்டு என்று
“அப்ப என்னை குரங்குன்னு சொல்ற ..
நீ வர்றப்ப நான் தூங்கிட்டு வேற இருந்தேனா உனக்கு சந்தேகமேயில்லை அதுல என்று சிரித்தான்.
காபி கோப்பையை அருகில் வைத்து விட்டு நிமிர்ந்த மாதவி.’இதெல்லாம் சொல்லு ..ஆனா அங்க பூவை படுற பாடு மட்டும் என்னன்னு நினைச்சு பாக்காத குரங்குக்கு மட்டுமா எல்லாம் எளிதா கிடைச்சது ..அந்த காட்டோட வளம் அப்படி எல்லா விலங்குகளும் அப்படித் தான் சுத்தி திரியுது...கஷ்டப்படாம காலம் தள்ளுது ..அலையாம கொள்ளாம நினைச்சதை விட அதிகமா கிடைச்சா எப்படி அருமை தெரியுங்கிறேன் ..” மீண்டும் கதைக் களத்தை சுற்றியவள்..
‘இப்போ நேரிடையான சொல்றேன் கேட்டுக்கோ ..நீ நினைச்சுக்க கூட பார்க்காதது எல்லாம் இவ்வளவு எளிதா கிடைக்கிறப்ப ...நீ நினச்சு நினச்சு வேணும்னு நினைக்கற ஒன்னை அடையறது அப்படி என்ன முடியாத காரியமா உனக்கு?’
அவ அதுக்கு மேல உன்னையே நினைச்சு நினைச்சு மருகுறா...அறிவும் புத்தியும் உன்னை நினைக்காதன்னு சொன்னாலும் அதையெல்லாம் கேக்குற நிலையில இல்லை அவ மனசு. இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்?
கண்முன்னே காட்சிகள் விரிய ..இருவரும் சந்தித்த நாள் மனதில் ஓடியது...முகிலுக்கு..
முகிலின் மனத்தை படித்தது போல்
“இனிமே அந்த கதையெல்லாம் முடியாது தம்பி..அங்க ..அவங்க அப்பா காதுக்கு உங்க சங்கதியெல்லாம் போயிருச்சு...அவரை தெரியமில்ல ..ஊருக்குள்ள பெரிய தல ..” என்றாள் மாதவி..
அதிர்ச்சியில் உற்சாகம் வடிந்து ..கவலை ரேகைகள் முகிலின் முகத்தில் தென்படத் தொடங்கியது. “அவருக்கு எப்படி..அதுக்குள்ள..எப்படி ..” என்று சொல்லி முடிக்க முடியாமல் சொல் தேடி அலைந்தான்…
“ ஆ….அதெல்லாம் ..அப்படி தான்..நீ ..உன்னை சுத்தி என்ன நடக்குது ..பாக்க மாட்டியா? ..விசாரிக்க மாட்டியா..? ஊருக்குள்ள நாலா பக்கமும் காவலுக்கு ஆளு ..துப்பு சொல்ல ஆளுன்னு போட்டு வச்சிருக்காரு….அவங்களுக்கு எப்படி கடுக்கா கொடுக்கிறதுன்னு இவ கிடந்து தடுமாறி கிட்டு கிடக்கா …..இனிமே பகல் நேரத்துல வெளிய வர்றதே முடியாது ….நட்டநடு ராத்திரியில கூட சொல்ல முடியாது ..ஊரு மொத்தம் தூங்குற ஜாமத்துல தான் வர முடியும் ..”
மாதவியின் பக்கம் பார்க்காமல் கண்ணில் தளும்பிய நீரை மறைக்க
சுவரில் மாட்டியிருந்த படத்தையும் அதில் இருந்த நிலவையும் வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் முகில்.
மாதவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. குரலில் மென்மையை வலிந்து ஏற்றுக் கொண்டு…” சரி ..விடு நீ மீதி கதையை கேளு..என்று திசை திருப்பினாள். கூத்துப் பட்டறையே ..கும்முனு சத்தமேயில்லாம பனி கொட்டுற ராத்திரி மாதிரி அமைதியாய் இருந்தது..உருக்கமான குரலில் தோழி கதாப்பாத்திரத்தின் குரல் ஒலித்தது..
” நீ காட்டுப்பக்கம் போய் பார்த்தியா..? புதரா மண்டி கிடக்குற வேங்கைப் பூ வாசமும் ..பச்சை பசேல்ன்னு காடு மாறி கெடக்கறதையும் பாத்து என்ன நடக்குதுன்னு உனக்கு புரியலையா.....நிலா...எந்நேரமும் ..விடாம வானத்துல காஞ்சிட்டு இருக்கே..அதை சுத்தி கோட்டை கட்டிக்கிட்டு எந்நேரம் வேணா மழை வருமனு தோணலையா ன்னு கூத்துல கேள்வி மேல கேள்வியா கேக்க கேக்க பூவை அங்க உட்கார முடியாம அழுதுட்டு எழுந்துருச்சு உள்ளாற ஓடிட்டா ..அதையெல்லாம் பாத்ததுக்கு அப்புறம் மனசு கேக்காம தான் இந்த குளிர்லயும் பனியிலயும் நான் உன்னை பாக்க இவ்வளவு தூரம் வந்தேன்...என்று மாதவி பேசுவதை கேட்க முகிலின் மனம் அங்கே எங்கு இருக்கிறது?..
பாடியவர்: கபிலர்
திணை : குறிஞ்சித் திணை
திணை : குறிஞ்சித் திணை
No comments:
Post a Comment