அகம்#1
#காரோடன்
வண்டுகள் சிதைத்த
வண்ணமலர் மாலைகள்
தன்னுயர் உச்சியில் முடிந்து
மின்னியொளிரும் கழலை*யணிந்து
மின்னலாய் விரையும் பரிமேலேறிய
மழவர்தம் சதியை நற்போர் செய்த
முருகனைப் போல நெடுவேள் ஆவியும்**
முறித்திடுவானே
வேலையுடைய வேளிர்த்தலைவன்
வியனுறு வீரமும் செறிவுடன்
பயனுறு மலையில்
திருத்திய தந்தக்களிறுகள்
பொருந்திய பொதினி மலையினிலே
சீர்மிகு சிறு காரோடன்***
நேர்பட தீட்டிடுவான்
கூர்வேலும் அம்பும் வாளும்
சாணை தீட்டும் கல்லாலே
மானே நீயும் அறிவாயோ ?
தீட்டும் கல்லுடன்
கூட்டாய் அரக்கை****
சேர்த்து இணைத்து
கோர்த்து வைத்து
கல்லும் அச்சும் விலகிச்
செல்லும் அச்சம் தவிர்த்து
ஈர்த்து நின்று பிரியா
தென்றும் செவ்வன
நன்றாய் சிறப்பது போல
ஒன்றாய் இருப்போம்
என்றே வாக்கினைத் தந்த
என்றன் தலைவன்
இன்று அதனை மறந்தது ஏனோ..
சொல்லடி தோழி?
சொல்லடி நீயும் ..
பொன்னும் பொருளும்
தன்னிகரில்லா செல்வம் ஈட்டிட
என்னை விடுத்து சேய்மை
சென்றது ஏனோ?
பணையிளந்தோள்கள்
இணையது விடுத்து
சிறுத்து மெலிந்து
வருத்தமுற்றது
காணாய் தோழி! நீ
காணாய் தோழி!
நிலமது பிளக்கும் தீயாய்
களத்து பசுமையை எரித்த
வெம்கதிர்கள் வேகமாய் தாக்க
தம்நிழல் குறைந்து
மரங்களும் உலர்ந்து நிற்கும்
பாறைகள் காய்ந்து
ஈரப்பசையோ இம்மியுமின்றி
இறுகி கிடக்கும்
நீரில்லா சுனைதனில்
நெல்லது விழுந்தால்
துள்ளிப் பொரிந்திடும்
வெம்மையுடைய வெறும் வெட்ட
வெளியில் வருவோரின்றி
வழிப்பறி கொள்ளையர் கூட
சோர்ந்திருக்கும் ..
வறண்ட பாலைநிலத்தினிலே
பரந்த பொலிவில்லா பாதையிலே
சுழற்றியடிக்கும் சூறைக்காற்றில்
கழன்று உதிர்ந்த முருங்கைப் பூக்கள்
திரைக்கடல் அலையின் சிதறலென
நுரையாய் அலைந்து திரியும் ..
கரையில்லா காட்டினை கடந்து
விரைந்து போன மாயமென்ன
உரைப்பாயோடி தோழி நீயும்
உரைப்பாயோடி தோழி ?
கருவிகளுக்கு கூர்மை ஏற்றுபவன் காரோடன்' எனப் படுவான்..(wikisource.org)
அகநானூறு பாடல் #1 அடிப்படையாக கொண்டு எழுதியது.
#அகம்#1
எளிமையாக்கம்: #ராஜி_வாஞ்சி
(https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/730)
அகநானூறு - 1
1. பாலைத் திணை பாடியவர் - மாமூலனார்
துறை - பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது
1. பாலைத் திணை பாடியவர் - மாமூலனார்
துறை - பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது
வண்டு படத் ததைந்த கண்ணி ஒண் கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நல் போர் நெடு வேள் ஆவி
அறு கோட்டு யானைப் பொதினி ஆங்கண்
5 சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் பிரியலம் என்ற சொல் தாம்
மறந்தனர்கொல்லோ தோழி சிறந்த
வேய் மருள் பணைத் தோள் நெகிழச் சேய் நாட்டுப்
பொலம் கல வெறுக்கை தருமார் நிலம் பக
10 அழல் போல் வெம் கதிர் பைது அறத் தெறுதலின்
நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு
அறு நீர்ப் பைம் சுனை ஆம் அறப் புலர்தலின்
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும்
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய
15 சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை
நார் இல் முருங்கை நவிரல் வான் பூ
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர்உற்று
உடை திரைப் பிதிர்வின் பொங்கி முன்
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே
No comments:
Post a Comment