சுட்டெரிக்கும் சூரியனின்
பட்டப்பகல் உச்சியில்
இரட்டை சில்லு வண்டியை
இரட்டை பின்னல் பறக்க
தோழி ஓட்ட ..
நட்பைத் தாங்கிப் பிடிக்க
நாங்களிருவர் உடனோட
அடுத்த கால்மணியில்
தோழிகள் தொடர
என்னுடைய முறையாய்
மிதிவண்டி பயில
இருபது காசுகளுக்கு
இருபது நிமிடங்கள்
இனிதாய் இனிக்கிது
இன்று வரை வருடங்கள்
இருபதை தாண்டியும் ….
ரோஜாக்கூட்டமென இளஞ்சிவப்பு
சிற்றாடையுடன் சீருடை சிட்டுக்களாய்
சிரிப்பதொன்றையே
முழுநேர வேலையாய் கொண்டு
முழுத் தெருவையே அடைத்து - தெரு
முனை காக்கும் ரசிகர்கள்
எண்ணிக்கை சரி பார்த்து
எதுவுமோ அறியாதவாறு
சீருடை சரி செய்து
சிரிப்பை தொடர்ந்த
சிங்கார நாட்கள் ...
சில பல ஆண்டுகள்
சிதறியோடினாலும்
சில்லென இதயத்தில்
சிம்மாசனமிட்டு …
இழந்த காலங்கள்
கலைந்த மேகங்களா?
கமழும் கற்பூரப் பெட்டியாய்
No comments:
Post a Comment