கவிதை ஒன்று:
பளிங்கு நீர்
சலங்கை கால்
அலுங்காமல் கரை சேர்க்க
அலங்கார நாயகன்
கலங்கக் காரணம் ஏது ?
கவிதை இரண்டு:
கலங்காதோ கரையோர
கண்மாய் நீர்
கால் வைத்து கலக்கிட்டால்?.
காத்திருந்தால் கலக்கம்
நீங்குமோ?
பளிங்காய் மாறுமோ?
என் மனக்கலக்கம்
நீங்கும் மட்டும் காத்திருப்பேன் எனக்
கதை சொல்லத்தான்
கன்றுடன் நீ .கரையில்
காத்து நின்றாயா? - என்
கண்ணா ! உள்ளம் கவர்க் கள்வா!
கவிதை மூன்று:
பருக நீர்க் கண்டு
பாய்ந்தோடிய கன்று
பதுமையாய் மாறியதேன் ?
பாதக் கமலம் பார்த்த பரவசமோ?
கவிதை நான்கு:
உன்னழகுப் பட்டாடை
முன் நெற்றியில் பட்டாட
தன் உச்சி பொன்னாக
தான் மறந்து
தண்ணீர் துறந்து
உன்னைப் பருகும்
உத்தவக் கன்றோ?
கவிதை ஐந்து
பத்து விரல் …
தத்தெடுத்த தண்ணீர்..
பாதம் கண்ட நீர்..
வேதம் உண்ட நீர்..
கீதத்தில் மயங்கிற்றோ
கீழிருக்கும் பசுங்கன்று?
கவிதை ஆறு:
பரதம் ஆடிய நீர்
விரதம் இருந்து - இப்
பாத சேவை கண்டதுவோ?
பரதம் மறந்து
பரவசம் மிகுந்து
பசுங்கன்றுடன் சேர்ந்து
பர மோன நிலை நின்றதுவே.
கவிதை ஏழு :
கார்மேகக் காலிரண்டு
நீர்மேலே நிற்கையிலே
காட்டான் குளத்து நீர்
கருமுகிலாய் கலங்காத
காட்சியென்ன அற்புதமோ?
தகதகக்கும் தண்ணீருக்கு
தங்கக் கொலுசும் உன் பொன்
அங்கவஸ்திரமும் காரணமன்று
நன்கிதனை நான் அறிவேன்.
மங்கா உன் மார்கழி மாத
அருளன்றோ பொங்குது
பொன்னாக .
கவிதை எட்டு:
கொத்தாக கருந்துளசி
சத்தாக சலத்தின் மேல் - உன்
பத்து விரல் கண்டு
பசுங்கன்று எண்ணியதே…
வாகாக வந்துண்ண
வாய் வைக்க சிந்திக்க
கருந்துளசி காண்கிலேனே
பெருந்துளசி பேறு பெற்றேன்
அருந்தவமே யாது செய்தேன்?
பொருந்தி உந்தன் பாதம் சேர்ந்தேன்.
கவிதை ஒன்பது:
முத்து விரல் பத்தைக் காட்டி
முகத்திரையை போட்டுவிட்ட
மாயமென்ன?
பட்டுப் பீதாம்பரம்
சட்டென காட்டிவிட்டாய்.
பொற்சதங்கையிரண்டை
நற்பதமென காட்டிவிட்டாய்.
முகம் மறைத்த மாயமென்ன?
பதம் கண்டால் போதும்
இதம் தானாய் ஊறும் ..
சொல்லாமல் சொல்லவே
முகம் மறைத்து
அகம் திறந்தாயோ?
கவிதை பத்து:
பாதம் மட்டும் பார்த்து
வாதம் ஏதுமின்றி ஏற்கும்
பதம் யாம் பெறவில்லை.
முழுநிலவாய் முகம் கண்டு
முழு மனதாய் அகம் தந்து
கண்ணிரண்டில் கருணை கண்டு
கண்ணனென போற்றி நின்று
செவ்வாய்க் குழலில்
மெய் வாய் மறந்து
காய் கனி துறந்து
போய் வா என்றாலும்
போகாமல் உன் பதம்
பணிந்திடுவோம்..
இன்று நீ முழுமதிமுகம் காட்டிவிடு.
No comments:
Post a Comment