எண்ணுதல் உயர்வுள்ளல்
எண்ணமெனும்
வண்ணக்கலவையது மனிதத்தின்
சின்னமே - வலைப்
பின்னலாய் சுற்றி வரும்.
மண்ணறிவும் - வியத்தகு
விண்ணறிவும் உலகில்
தன்னிடையே தளிர்ப்பதற்கு
தன்னிகரில்லா காரணமே கூரறிவும்
எண்ணமென்னும் கருவியுமன்றோ
.
தன்னிலை மறந்து - வெறும்
மண்ணென மாயும்
புன்மைக்கும் - கெடும்
வன்மைக்கும் வையகத்தில்
பெண்மை மதிக்கா
தன்மைக்கும்
எந்நாளும் துணை போவதும்
எண்ணமெனும் கருவியன்றோ?
எண்ணமதை ஆட்டுவிக்கும்
மன்னவனும் மனமென்னும் மாயை
திண்ணமாய் இதனை செப்பிடலாம்.
மனமது செம்மையானால்
குணமது குன்றிலேறும்.
எண்ணமது வானம் ஏறும்.
மனம் என்னும் பாண்டமதில்
புலனென்னும் பொந்துகள்
ஐந்தினையும் அறிவென்னும்
பசையாலே சமன் செய்து
இசைந்த நல்விருந்தாம்
உயர்நெறியின் பாதையிலே
உள்ளமதின் பாட்டையினை
உவந்து நாம் திருப்பிட்டால்
உயர்வதையே ஓயாது
நோக்கும் புலனைந்தும்
மெல்லத் தான் விட்டிடுமே
கள்ளத்தனத்தையுமே
பொறியைந்தில் பொதிந்து வரும்
அறிவனைத்தும் உத்தமமாகி விடும்
உள்ளமெனும் பெருங்கோயிலிலே
உட்புகுந்து வரும் எண்ணமெலாம்
திருமந்திரமாகிவிடும் ..நன்றே
அருள் கூடி விடும் இன்றே
எண்ணுதல் உயர்வுற்றால்
கண்ணுறலாம் திருக்காட்சி.
No comments:
Post a Comment