கெடல் எங்கே தமிழின் நலம்..அங்கெலாம்..
தன் பெயரைத் தந்திட்டாள்
தான் பிறந்த மண்ணிற்கு.
தன் அகத்தே தானிருக்க
தயவின்றித் தவிக்கின்றாள்.
தென்னகத்து மொழிக்கெல்லாம்
தாயாகி நின்றவள். -பெரு
நோய்க்கின்று இரையாகி
தினம்தோறும் இளைக்கின்றாள்
கணம்தோறும் களைக்கின்றாள்.
அகம் என்றும் புறம் என்றும்
ஆயிரம் வாள்க் கொண்டாள்- பல்லாயிரம்
களம் கண்டாள்.
வீரமென்றும் ஈகைஎன்றும்
ஈண்டு தனம் கொண்டாள்.
கோடி மக்கள் பெற்றவளை
நாடி வந்த மாக்கள்
மலடன்றோ நீ என்றால்
மலைத்தே தான் நிற்கின்றாள்.
அவ்வை எங்கே ஏகினாள்?
கொவ்வைக்கண் சோழன் சென்றதெங்கே?
பதர்களையா பெற்றாள் பிள்ளையென - செங்
கதிர்கலென்றெ செம்மாந்திருந்தாள் செல்வமகள்.
அன்பு எனும் அறமூட்டி
வீரமெனும் உரமூட்டி
பண்புதனை பாலாக்கி
என்புதனை எருவாக்கி
ஏற்றம் மிக செய்திட்டாள்.
கடல் கடந்து கரை மறந்து
கடாரம் வரை சென்றவள்
கற்றலுக்கு கலங்கரை விளக்காய் நின்றவள்
நிற்றளுக்கு நிழல் இன்றி நிர்கதியாய் ஆனதேனோ?
காரிகையாம் கன்னியவள்
பேரிகையாய் முழங்கியவள்
சூரை நோய்க் கண்டவளாய்
சுருண்டதுவும் எக்காலம்?
தன் சரிதை தான் அறியா இனமானோம்.
நாம் இன்று நடமாடும் பிணமானோம்.
தன் சரிதை தான் அறியா இனமானோம்.
நாம் இன்று நடமாடும் பிணமானோம்.
பெற்றவரை, தன்னை
உற்றவரை வெறுத்தொதுக்கும்
கற்றவரை - திரு
பெற்றவர் என மகிந்தோம்.
திருவே தான் அனைத்திற்கும்
உருவே என்றோம்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனமுண்டு - நாமோ
வேற்றான் தோட்டத்து விதைக்கு மட்டுமே உயிருண்டு என்றோம்
காட்டான் போல் வாழ்ந்தானே கதி என்றானோம்
வேர் மறந்து ..வினை மிகுந்து
பார் பழிக்க ..நினைவழிந்து நிற்கின்றோம்.
எதை இழந்தோம்
எதை பெற்றோம் என்றறியாமல்
விதை நெல்லை வீசி எறிந்து
ஜதை மாடு வாங்கி ஜம்பமாய் திரிந்தோம்.
குறுந்தொகையை குற்றுயிராக்கி
கும்மிப் பாட்டை அம்மியில் அரைத்து
புறநானூற்றை புறம் தள்ளி
அகநானூற்றை அற்பம் என்றெண்ணி
எட்டுத்தொகையை தட்டிக் கழித்து
பத்துப்பாட்டு என்றால் வெத்து வேட்டு என்று
கலிங்கத்து பரணியை
அலுங்காமல் அழித்திட்டோம்
வஞ்சிப்பா என்றால்
வஞ்சிப்பார் வன் உலகில்
கெஞ்சிப் பார் என்றோம்.
வெண்பா என்றால்
கோபியின் மகளா என்றோம்.
ஆசிரியப்பா என்றால்
அது சரியப்பா - அடுத்த
வேலையை பார் என்றோம்.
கெடல் எங்கே தமிழின் நலம்..
கண்ணுற்றோம் களங்கங்கள்..
அங்கெலாம்
யாது செய்வோம் ?
யாண்டு செய்வோம் ?- திகைப்
பூண்டு நின்றோம்..
உண்மை உரக்க பேசியது ..
வினவென்ற வாள் வீசியது:
உம்மொழி உயர்த்த வந்த உத்தமியே
தீந்தமிழின்
விதி என்றாய் கதி என்றாய்
வீணர்களின் சதி என்றாய்.
விதியை வெல்ல உன்
மதி கொண்டு என் செய்தாய்?
.
சங்கம் வளர்த்த தமிழுக்கு
பங்கம் செய்தோம் என்றாய் - உன்
பங்காய் செய்த பணி என்ன
சங்காய் நீ முழங்கென்றார் பாரோர்.
முச்சங்கம் கண்ட முத்தமிழென்றாய்.
அச்சங்கதி அறிவாயோ ?
மிச்சங்கள் மீதி இன்றி - இச்
சணமே இயம்பிடென்றார் - தமிழ்
இச்சை மிகு இனியவர் தாம்.
அச்சங்கள் மேலுற
சொச்சங்களை சொல்லாக்கினேன்.
பிச்சைப் பாத்திரத்தில் முன்னென்ன பின்னென்ன- இச்
சகத்தில் தமிழ் இனியாள்
அரியாசனத்தில்
பரிகார தோரணையில்
பவனி வந்த நேரம் -யாம்
அவனியிலே அவதரிக்க ஆசி இல்லையே.
நற்றமிழை பூசித்தல் ஒய்ந்து
யாரிடம் யாசிப்போம் என்றே
அவள் யோசிக்கும் நேரம்..
எம் சுவாசித்தல் தொடங்கிற்றே.
தேனூறும் தமிழன்னை தலை தடவி
தாலாட்டி தங்க தொட்டிலிட்டு
தரணியிலே தவழ விட்டிருந்தால்
மரபுக் கவி எழுதி
மாலைகள் தான்பெற்றிருப்பேன்.
திரிபு கவி எழுதி
திசை தெரியாமல் திகைக்கின்றேன்.
கெடல் எங்கே தமிழின் நலம்....
அங்கெலாம்..
சட்டென தெறித்தது..தீர்வொன்று
பொட்டில் அடித்தாற்போல்..
பெற்ற மக்கள் நாமிணைந்து
உற்ற தமிழைக் காத்திட
ஊர் கூடி தேர் இழுத்தால்
சீர் நாடி வந்திடுமே!
செந்தமிழும் சிறப்புறுமே.
கெடல் எங்கே தமிழின் நலம் ?
என்றோர் வினா வந்த நேரம் - மெனக்
கெடல் இங்கே என தமிழர் தோள் தட்ட - தமிழ்
வளம் பெருகும் வாழ்வு உயரும்.
கெடல் எங்கே? கேடு நீக்கும்
தேடல் எங்கே?
ஆய்வுதனை செய்தல் வேண்டும்.
ஒய்வு தனை ஒருத்தல் வேண்டும்.
கன்னி தமிழன்னை
களையிழந்து வலுவிழந்து
நிலைகுலைந்து நிற்கலாமோ
பெற்ற தாய்தனை மறந்தாலும் -நாம்
பெற்ற சேய்தனை மறப்பதுண்டோ?
பாலிற்கு ஏங்கும்
பச்சிளம் பிஞ்சாய்.
தாயே ஒரு சேயானது போல்
பைந்தமிழ் அன்னை
நைந்ததோர் நிலையில்
தமிழன்னை தவிக்கலாமா? - நாம்
அவளை தவிர்க்கலாமா?
பைந்தமிழ் அன்னை
நைந்ததோர் நிலையில்
தமிழன்னை தவிக்கலாமா? - நாம்
அவளை தவிர்க்கலாமா?
கற்றவர் பொருள் பெற்றவர்
மற்றவர் எங்கும் நிறை நம்
உற்றவர் உகந்து மனம்
நிற்றலில் நித்தியமாய் நிலைத்திடுவாள்
நற்றமிழாம் நாயகியே!
அன்னை தேசத்தில்
அன்றாட வாழ்வதனில்
அன்னை தமிழ் அங்கம் பெற்று
அரசாள வேண்டுமம்மா.
நற்றமிழைக் கற்றோரே
பெற்றிடலாம் உயர்க்கல்வி
நனி தமிழில் நயந்திட்டால்
இனி மேன்மை பணியிடத்தில்
என்றே தான் நாடாளும் நல்லவரே
நன்றே தான் பகர்ந்திட்டால்
வென்றே தான் வந்திடுவாள்
முன்றில் மேல் முகிழாக
மூத்தகுடி முத்தமிழாள்.
அன்னை தேசம் துறந்தோர் கதை பார்ப்போம்.
மண்ணை ஆளவும்
விண்ணை நாடவும்
தன்னை மறந்ததோர்
வேக தேசம் புகுந்தோம்.
கணினியை கண்ணுற்றோம் ..
கண்டவுடன் காதலுற்றோம்.
கடைசியில் காமுற்றோம்.
நிழல் உலகில் கட்டுண்டோம்.
நிஜ உலகில் வெட்டுண்டொம்.
மின்னல் வேகத்தில் - வலை
பின்னல் தேசத்தில் புகுந்தோம்.
கன்னல் மொழி மறந்தோம் .
சன்னமாய் சுவாசித்து - சரிபாதி
சடமாகி போனோம் - இன்று நாம்
மடமாக ஆனோம்.
நல்லவனாய் நாம் பிறந்து
வல்லவனாய் வாழ்ந்து விட்டு
'சில்'லென நாம் மாறும் முன்னே
சிலிர்த்தே தான் எழுந்திடுவோம்.
நம் அகரம் ஆய்ந்திடுவோம்.
சில சிகரம் தொட்டிடுவோம்.
கோடுகளை எழுத வந்தோம்.
எழுத்துகளை தொலைத்துவிட்டோம்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதமே
வளைதளம் என்றும் நம் கோதண்டம்.
பாலைவனத்திலும் ஒரு
சோலைவனமுண்டாம்.
வார இறுதியில் ..களிபுற்றுருக்க
காணக் காட்சிகள்..கானொலிகள் அணிவகுப்பு
ஆயிரம் பதினாயிரம் உண்டு.
அயல் நாட்டு வாழ்வுதனில்.
ஓடி உழைத்தோம் ஆடி களைதோம் என்பதின்றி
தேடி தேடி தெருவெங்கும்
தமிழ் பரப்பும் பாலர்ப் பள்ளிகள் இங்குண்டு.
பிஞ்சு மழலை மதலைகளும்
கொஞ்சு தமிழில் கூவ கண்டு
விஞ்சுதம்மா நெஞ்சகமே.
கன்னித் தமிழ்
மின்னி மிளிர்கின்றாள்
கண்டம் தாண்டி - புது
அண்டம் காண வந்ததுமே.
வறண்ட வானிற்கோர் வானவில்லன்றோ?
வருங்கால வான்மழைக்கு வரவேற்பன்றொ?
வலையுலகை நம் கலையுலகம் ஆக்கிடலாம்.
கலைகள் யாவும் நயமாக பயின்றிடவே
வலைகள் யாவும் சுயமாக நவின்றிடுமே
வலையுலகில் பூக்களுண்டு - மணம்
பரப்பும் தமிழ் வலைப்பூக்களுண்டு.
வலைப்பூக்களையே வண்ண
மாலையாக்கி தமிழ் மகளை
சோலையாக்கி சுகித்திடுவோம்.
பதும வியூகமாம் பயனுறு வலையுலகம்.
பதமாய் நாம் நுழைந்து
இதமாய் நாம் இருந்திட்டால் - நல்
விதமாய் பல கற்றிடலாம்.
நன்மைகளும் பெற்றிடலாம்
நல்ல தமிழும் பயின்றிடலாம்.
ஒத்த மனத்தினரை
மொத்தமாய் ஒரிடத்தில்
கொத்து கொத்தாய்
கொணர்ந்திங்கு கூட்டிடுதே
கண்ணாயிரம் கொண்ட கணினிக் கானுலகு.
புவியரங்கு பூச்செண்டாய் பூத்திருக்கும் வேளையிலே
கவியரங்கை கண்டிடுவோம் கணினி கண் கொண்டு.
வலையுலகில்..
பத்திரமாய் நாம் சென்று - திட
காத்திரமாய் வென்று வர வேண்டும் - தமிழ்
பா திறத்தை மொண்டு வர வெண்டும்.
நற்றமிழை நாம் காக்க
நல்லதோர் வலையுலகுண்டு.
நங்குணர்ந்த பெரியோர்கள்
பண்புயர்ந்த சான்றோர்கள்
நுண்ணறிவு ஞானியரும் - தொழில்
நுட்பறிவு விஞ்ஞானியரும்
ஒன்று கூடும் ஓர் அரங்கு வலையுலகம்.
பல்கோடி தகவல் தளங்கள் தான் இங்குண்டு.
அதனை தமிழாக மாற்றுவதில் நம் பங்குண்டு.
அத்தனையும் சாத்தியமே
மெத்தனத்தை நீக்கிவிட்டால்.
மேலை நாட்டினரை கண்டு நாம் கற்க ஒன்றுண்டு.
அறிவியலும் புவியியலும்
புகுத்திட்டர் புனைக் கதைகலளாய்.
நாமதனை நம்மக்கள் நனி தமிழில்
நவின்றிடவே நயமாக செய்திடல் வேண்டும்.
தாய் மொழியில் கற்கண்டு கதைகளாய்
கலிலியோவும் காளமேக புலவனையும்
கண்மணிகள் கற்றிடவே காலம் தான்
கனிந்திடுமோ?
கொட்டிக் கிடக்குது கொஹினூர் வைரம்
வெட்டி எடுக்க முடியா ..விவரங்கள் ஏராளம்.
நெட்டி கொணரவே ..இங்கு வேண்டும்
தமிழ்சுவைத்த " மென் ஞானிகள்".
சுஜாதாவின் சுவடு படித்த விஞ்ஞானிகள்.
வெள்ளம் கண்டது மாநிலம்.. - நல்
உள்ளம் கண்டது நானிலம்.
அண்ணன் தம்பி என்றானோம் - தமிழ்
அன்னைக்கென்றால் ஒன்றாவோம்.
தமிழன்னைக்கின்றோர் பெரும்சாபம்.
நன் மக்கள் கொள்வோம் மிக தாபம்.
ஈரடியில் மூவுலகை
காலடியில் தந்திடுமே
பார்போற்றும்
நேர்க்கோட்டு சிந்தனையை
நேர்த்தியாக தந்திடுமே
குற்ள் என்னும் குறும்பாவே.
தன்னம்பிக்கை தனை நாடி
தரணியெங்கும் தவிப்பொன்று
தகித்திருக்க
சங்கத்தமிழை நாம்
சங்கடங்கள் பாராது
சற்றே தான் பிரட்டிட்டால்
வற்றாத ஊற்றாக வந்திடுமே
நம்பிக்கை.
நம் கைக்கு.
மெல்ல தமிழினி சாகும் என்றான்
நற்றமிழின் நல்லதோர் காதலன் பாரதி.
நாமிருக்கும் காலம் வந்து
நாம் வளர்க்கும் தமிழும் கண்டு
நனிந்தே தான் நவில வேண்டும்:
" தமிழினி தழைத்தே ஓங்கும் ...
தரணியில் செழித்தே பொங்கும்
காத்லியாள்...கனிமொழியாள் ..
களிப்பே ..தருவாள்....கன்னித் தமிழ்"
கட்டியம் கூறிடுவான் - அது
சத்தியமாகிவிடும்.
No comments:
Post a Comment