ஆனந்தா..
அன்பின் உரு அண்ணல் புத்தரின்
அண்ணனவர்..அன்பின் நிழலுமவர்.
அன்பு உரு அண்ணலின் நிழலுமவர்.
அன்றொருநாள் அண்ணலுமே அறிந்திட்டார்..
ஆனந்தன் அறிவுக்கண் திறக்கும் நாள் வந்ததென்று.
அதற்குமுன்.. ஆனந்தர் மொழிந்திட்டார்:
தம்பி நான் நாளைமுதல் சீடனாவேன்.
தப்பாமல் இன்றெனக்கு மூவாக்குத் தந்திடல் வேண்டும்.
இப்போதே என்றும் தான் முறுவலித்து நின்றதுவே அன்புருவும்.
எப்போதும் என்குருவே உன்னோடு நான் இருத்தல் வேண்டும்.
தப்பாமல் உன் உணவு,உள் மருந்து நான் கொடுத்தல் வேண்டும்.
இரண்டாவதாய் நான் கேட்கும் வரமொன்றுண்டு.
இருண்டேதான் என் மனதில் தோன்றும் ஐயம்
அப்பொழுதே அந்நொடியே தீர்த்தல் வேண்டும்- பொறு மகனே
எப்பொழுது காலம் வருமோ அப்போது தீர்ப்பேன்
என்றும் தான் கூறுவது நான் ஏற்கிலேன்.
மூன்றாம் வரமதனை முத்தாய்ப்பாய் கூறுவேன்.
நடுநிசியில் நான் அழைத்து வரும் மக்கள்
துயர் போக்க தயை என்னும்
நல் ஆசியை நீ என்றென்றும்
அளித்திடல் வேண்டும்.
யாசித்து நின்றான் ஆனந்தன்.
யோசிக்கவேயில்லை அன்புருவும்.
அப்படியே என்றது ..
அவ்வாறே நடந்தது.
அண்ணன் ஆனந்தன்
அண்ணல் ஆனந்தா ஆனது.
அன்பு சீடனாய் போனது.
ஆனந்தமே அன்புருவின் மூச்சானது.
அன்புருவே ஆனந்தத்தின் பேச்சானது.
ஆண்டுகள் அடுக்கடுக்காய் அகன்றோட..
ஆனந்தம் அன்புருவின் நிழலானது.
ஆனந்த அறிவுக்கண் மட்டும் பகல் கனவானது.
ஊன்கண்ணில் ஊற்றெடுக்க
யான் செய்த பிழை என்ன?
நின் அருளால் நித்தம் ஓராயிரம்
"தான்" அறுத்து சித்தம் சீராக்கி
வான் நோக்கி புத்தம் புகுகின்றார்.
யான் என்றோ ஆவேனோ ?
வீணாய்த் தான் போவேனோ?
அன்புரு அல்லிவாய் அலர்ந்தது:
நான் இப்பூ நீக்கும் நாள்
நீர் உட்பூ நோக்கும் நாள்.
யான் இளவல் ..நீர் தமயன் என்றதொரு பற்றுதனை
கூன் முதுகில் ஏற்றி நீரே சுமக்கின்றீர் இன்றளவில்
என் இளவல் எனைக்காப்பான் என்றதொரு
தன்முனைப்பில் தலைசிக்கி நீர் உள்ளீர்.
குருவாக யான் இருப்பின் நீர் தானே
மருவான மாசக்கற்றல் வேண்டும்.
குரு என்றும் விளக்கே தான்
குரு என்றும் இருள் நீக்கி
வழிகாட்டும் விளக்கே தான் ஒளி அல்ல.
விளக்காக யாம் வந்தோம்
ஒளியாக நீர் மாறும்..
ஒய்யார ஒருக்களிப்பு அன்புருவின் சின்னமாச்சு.
மெய்யான ஒளி காண அதுவேதான் விளக்காச்சு.
அன்புருவும் .அகன்றதுவே மெய்க்காண
அன்புருவும் ..திரண்டதுவே மெய்யாக.
ஆனந்தத் தாமரை மலர்ந்ததுவே.
அறிவுக்கண் திறந்து சிறந்ததுவே .
No comments:
Post a Comment