Thursday, November 16, 2017

மீட்டாத வீணை....

மீட்டாத வீணை....

காட்டாத அன்பிருக்கும் அகத்தினிலே
மீட்டாத வீணைகள் வீற்றிருக்கும்
போற்றாத புவனந்தனில்
காற்றாய் கலந்திருக்கும் நாதம்
சேற்றிடை செந்தாமரையாய் - விஷ
காற்றிடை கவின் மலராய் - தென்னங்
கீற்றிடை ஒளிறு வெண்ணிலவாய்
மாற்றங்கள் கண்டிடவே
தேற்றங்கள் மனமிருத்தி
தடுமாற்றங்கள் பல ஒதுக்கி
விடுபட்டேகும் நாளை நோக்கி - சுகப்
படுதல் காண  தினம் எண்ணி ..


ஆரபியில் அயர்ச்சி நீக்கி  ..
பாக்யஸ்ரீயில் பதப்பட்டு  - புது
பூபாளம் புலருமென ..
பிலஹரியில் பலப்பட்டு
பிருந்தாவனசாரங்காவில் பிரியமுடன்
பெரும்வெற்றி வேகமென
சரிநிகர் சமானமாகி..
நல்லதொரு  நாளினிலே
கல்யாணியை கரம் பிடித்து
கலையாத கனவதனை
நிலையாக நனவாக்கிடலாம் …
மலையாக மலையமாருதம் ..
சிலையான சித்திர வீணைக்குள்

மீட்டாத.. வீணைக்குள் ..
பூட்டேறிய.. நுகத்தடியில் ..
ஏட்டிலேறா ..ஏக்கங்கள்..
பாட்டாய் ..பல கச்சேரிகள்
நாட்கள்தோறும் நடந்தேறும் ...

குறிப்பு : ராகங்கள் பெயர்களில்  வடமொழி எழுத்துக்கள் தவிர்க்க முடியாததால் பயன்படுத்தி உள்ளேன். மேலும் பெயர்ச்சொற்களை  பயன்படுத்தும் போது  மாற்றங்கள் செய்யலாகாது என்பதால் அப்படியே பயன்படுத்தி உள்ளேன்.
ஆரபி ராகம் - நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி உடல் அயர்ச்சி நீக்கும்.
பாக்யஸ்ரீ  ராகம் - மனதில் சமநிலை தரும்
பூபாளம்  - புது விடியலின் அடையாளம்
பிலஹரி - அன்பு/காதல் மற்றும் உறுதியான உடல் நிலைக்கு உதவும் ராகம்
பிருந்தாவனசாரங்கா - அறிவு,ஞானம்,வெற்றி ,பலம் தரும் ராகம்
கல்யாணி - தாயைப் போல் தயை காட்டி பயமகற்றும் தன்மையது

கவிதை ஆக்கம் : ராஜி வாஞ்சி

Thursday, October 19, 2017

மூங்கிலிலே காற்றிசைக்கும் காற்றலைகள்



மூங்கிலிலே காற்றிசைக்கும் காற்றலைகள்…
*****************************************************************

காற்றிலே கலந்த கானம்
கைக்கெட்டாத  கானல் நீராய் கண்ணாமூச்சியாட
மனதில் சோகம் திடமேகமாய்
வெடித்து கேவலாக

கானமின்று என்னைக் கண்டெடுக்க
கருமை..கரைந்து..
வெளிச்ச சூரியன் வெளீரென
வாரியிறைத்தது மனிதத்தின்
வழமையான மகிழ்மன மத்தாப்புக்களை

பசுமையிழந்த கொடியொன்றில்
தொற்றிக் கொண்டது ..தொலைதூர
குழலோசை ..குறுகியும் ..நீடித்தும்
காற்றின் கையசைவின் விரலாக

நீளமாய் ..நெளிந்து..வளைந்து
நெருங்கி வரும் வேணுகானம் ..
வெற்று குழலாகிய என்னுள்
நிரம்பிக் கொண்டிருக்கிறேன்
பேரின்பப் பேறோ
உயிர் நிரப்பும் வித்தையோ
கூடு விட்டு கூடு பாயும் வித்தகமோ
கானம் மிதக்கிறது..மெல்ல..
கானகமாய் மாறும் கணங்கள்
கண்ணெதிரே ..

காட்சி மாற்றத்தில்
கானகமாகிப் போகும் நானும்..

கவிதை ஆக்கம் : ராஜி வாஞ்சி
தமிழமுதுக் கவிச்சாரல் குழு

கழிந்த காலம்



கழிந்த காலம்
கலைந்த மேகம்
கலைந்த மேகம் திரட்டி
கடல்  கொண்டிடல் கூடுமோ?

மடல்  விரித்த  தாழை
மொட்டாய் ஆகுமோ?
விரவியோடிய  மணம்
மருவி  பூவில் புகுமோ?

பட்டுத் தெறித்த பதம் - வாய்
விட்டு வருதல்  நிதம்
சப்த கூட்டமது 
நிசப்தமாய் நிச்சலனமாகுமோ?

மசிந்த மாவதனை
மாகாணி நெல்லாக்கி
முப்போகம் விளைவிக்க
எப்போதும் வழியுண்டோ?

கழிந்த காலம் ..
அழிந்த கோலம்
விழுந்து புரண்டால்
கழியும் நிகழ்கணம்
அழியும் கோலமாய்

தெளிவாய் இக்கணம்
பழிக்கஞ்சி பண்பாய்
செழிப்பாய் மனம் இருந்திட்டால்
பொழிப்பாய் பொங்குமே - நதி
சுழிப்பாய் நகர்ந்திடுமே
வாழ்வோட்டம்

கடிந்த கால கடுகுகள் மேல்
மடிந்த மனதை நீட்டி
விடிந்த பொழுதை காட்டி
தொடர்ந்த கதையே
நொடியா மகிழ்வு.

#Rajikavithaigal


தமிழமுதுக் கவிச்சாரல் குழு

என்ன_புண்ணியம்_செய்தேன்

 18--10 2016
தமிழமுது_கவிச்சாரல்_குழுமம்

என்ன புண்ணியம் செய்தேன் ..

கண்ணனென உள்ளங்கவர்

கள்வனே ..மகனாக

செல்லமவன் அகவை

நாலிரெண்டில் ..

நல்லதொரு ..

விழாவினிலே ..

நல்விருந்தாய்

திளைத்திருந்த .

வேளையிலே ..கண்கள் …

குளமாக ..-

உள்ளம் தேம்ப ...

வெள்ளை பட்டுடையில் ..

வெள்ளமென கண்ணீர்த் திட்டுகள்

அள்ளி அணைத்திட்டேன் அன்பனை

சொல்லடா ..என் செல்வமே..!

உள்ளத்தில் காயமென்ன?

பிள்ளைப் பேசியது விசும்பலிடை :

அள்ளி எரியும் ..

எச்சில் இலைக் கூட்டத்தில் ..

அச்சச்சோ கண்டேனே

பிச்சைக்காரர்கள்

முண்டியடித்த காட்சி ..

வண்டி வண்டியாய் உணவதனை

திண்டுக்கல் சமையல்காரர்

கொண்டு வந்து குவித்தாரே

கொடுப்பதற்கு குறையேதம்மா

தடுப்பவர்கள் யாரும் இங்குளரோயம்மா

திகைப்புற்றோம்

திண்ணையிலிருந்த

பண்ணையார் முதல்

பண்ணையாள் வரை ..

புண்ணியம் மிக செய்தேனய்யா

மண்ணுயிரை தன்னுயிராக காணும்

புண்ணியனை மகவாய் பெற

வரம்_வேண்டும்_கொடுப்பாயா..என

கரம் நீட்ட ஏதுமுண்டோ இறையிடம் ?

கவிதை ஆக்கம் : ராஜி வாஞ்சி
Raji Vanchi

,

Tuesday, September 26, 2017

நமக்கென்ன என்று நாம்....
புவனா கருணாகரன் பாட்டுக்கு* எசப்பாட்டு ..
சிக்கல் விழுந்த நூல்கண்டு
எக்காலம் விடியுமென்று தெரியாது - எத்
திக்கில் எங்கு தொடங்கி
சிக்கலின் நுனி தேடுவதென்று
மக்களுக்கும் தெரியவில்லை
எத்தித் திரியும் கூட்டத்திற்கோ
புத்தி முழுதாய் மூழ்கி போனது
கத்தி கபடா தூக்கியேனும் - ஊர்
சொத்து பூரா சுருட்டிட வேணும்
கத்தி பேச நாதியில்லை
கத்தி நியாயம் கேக்குறவனை
குத்தி கொலை செஞ்சாலும்
பத்திரமாய் எட்டிப் பார்க்காத
சித்தி முதல் சீரியல் பார்க்கும் கூட்டம்
சித்தம் கலங்கி சிதறி போச்சு
மொத்தக் கதை வீணாப் போச்சு
எத்தைத் தின்னால் நமக்கெல்லாம்
சித்தம் தெளியுமுன்னு சொல்லுங்க
சத்தமா...செவிடன் காதுல சங்கு மாதிரி

*புவனாவின் கவிதை:

நமக்கென்ன என்று நாம்....

(கவிதையல்ல குமுறல்)


இயற்கை சுரக்கும் காவேரி 
தடுத்து முடக்குதொரு 
சதிக் கூட்டம்
தட்டி கேட்க துப்பில்லாமல் 
தூங்கி விழிக்கிறோம் 
நாம்
ஆத்தோர மணல் மொத்தம் 
கொண்டு போகிறதொரு
கொள்ளை கும்பல்
கண்டும் காணாதுபோல் 
கடந்து போகிறோம் 
நாம்

மீதேன் எடுக்கிறதொரு
கார்பொரேட் கம்பெனி
அன்றைய நெற்கழஞ்சியம் 
மாறுது இன்று தருசாக
கதிராமங்களம் கதறினாலென்ன
சுகமாய் வாழ்கிறோம் 
நாம்

பெப்சியென்று ஓர் உயிர்கொல்லி
தானமாய் எடுத்துக் கொண்டது 
தாமிரபரணி
நீர்- விவசாயி பிரச்சனையென 
குழாயில் தாகம் தீர்கிறோம்
நாம்

கடல் போன மீனவர்
வேட்டையாடப்பட்டால் 
நமக்கென்ன என்று 
நாம்

நெசவாளி வரியினால்
நொடுக்கப்பட்டால் 
நமக்கென்ன என்று 
நாம்

விவசாயி கடனினால்
நசுக்கப்பட்டால் 
நமக்கென்ன என்று 
நாம்

கல்வி கனவு களவு போய்
ஏழை மாணவர் இறந்தால் 
நமக்கென்ன என்று 
நாம்

தளபதி, மன்னர், நட்சத்திரம், சூரியன் 
நாயகன், தலைவர், தலைவி, வேந்தர் 
என்றெல்லாம் முடிசூட்டி
உதவாத உதவாக்கரைகளை 
தலை மேல் வைத்தாடுகிறோம்
நாம்

அம்மா, சின்னம்மா, என்றழைத்து
கால் தொட்டு வணங்கி 
மண்சோறு தின்று 
அலகு குத்தி 
மந்தமாய் வாழுகின்றோம்
நாம்

அரசியல்வாதிகளுக்கு 
கைக்கூலி ஆகிறோம் 
நாம்

நடிகைகளுக்கு வலைதள 
படை திரட்டுகிறோம்
நாம்

இலவசத்திற்கும் காசுக்கும் 
ஓட்டுப் போட்டு
அரசாங்கம் முழுதும் 
அசிங்கங்களை அமர்த்திவிடுகிறோம் 
நாம்

நம்மை பற்றி மட்டுமே 
நினைத்து பார்க்கிறோம்

நம்மை சார்ந்தோரை மட்டுமே 
காத்து வருகிறோம்

நம்மை மட்டும் நாமே
உயர்த்தி கொள்கிறோம்

நமக்கென்ன என்று
என்றுமே
நாம்...

-புவனா கருணாகரன்

Monday, September 25, 2017

ஓர் பாதி கண் மூடி .. ....இரு இதயம்.....

ஓர் பாதி கண் மூடி ..
இரு இதயம்
முத்தமிழாய் முகிழ்ந்திருக்க ..
நால்வேதம் நலம் பெருக்க ..
ஐம்பூதம் ..சாட்சியாக…
அறுசுவையால் ..அகம் ..மணக்க..
ஏழடிகள் இணை நடந்து …
எட்டுத் திக்கும் கொட்டி முழக்க..
ஏழு சுரங்களாய் யாழினிக்க - நல்
அறுகுணங்கள் சீராய்க் கொண்டு
ஐம்பெரும்காப்பியமாய் அகிலம் போற்ற
நான்கு பேர் நல்லாசியிலே இருவர்
மூன்றாய் முத்தென முகிழ - கண்மணி
இருவர் கருத்தாய் வளர ..- நல்ல
ஓர் பல்கலைக்கழகமாய் திகழ்த்திடுமே.

கவிதை ஆக்கம் : ராஜி வாஞ்சி

Thursday, August 24, 2017

பருவம்

பருவம்...

கவியுலகப் பூஞ்சோலையின் 24-8-16 ஆம் நாளான போட்டி கவிதையின் வெற்றியாளர் #கவிஞர்_Raji_Vanchi அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்


பட்டுப் பாவாடை குட்டி நிலா

பட்டு தாவணியுடன் பௌர்ணமியாய் ….பருவம்!

சுட்டிப் பையன் அவன் - இனிப்புக்

கட்டி விலக்கி

வெட்டியாய் ஊர் சுற்றினால்…..பருவம் !

மொட்டு விரியும் புதுமெட்டு போடும் ….பருவம் !

எட்டு ஈரெட்டாகி இளஞ்சிட்டாகிய ..பருவம் !

ஈரெட்டு மூவெட்டுக்கு முனையும் ..

கல்வெட்டுக் காதல் கனியும் பருவம் !

சேய்க்கெதிரி தாயும் தந்தையுமே

வாய் கிழியும் தாய் உருகும் .

மெய் ஒளிரும் பொய் பெருகும்

மூவெட்டு முத்தெடுக்கும் தம்முயிரை

நகைப்பெட்டி முடிவெட்டி மடிகட்டிய

நகை நாட்கள் ஓடி ...

பால்புட்டி கைப்பெட்டி

பிள்ளைகுட்டி…... பிழைப்பு மாறும்.

அடிபட்டு மிதிபட்டு அன்றாடம் அல்லலுற்று

படிகட்டு பலவேறி (மக்கட்)கல்வி கைதியாவர்.

மட்டுப்படா மனக்கனவுகள் மட்டும்

தட்டுத் தடுமாறும் தலை தெறிக்கும் ஓட்டத்தில்.

கவிதை ஆக்கம்: ராஜி வாஞ்சி

Saturday, May 27, 2017

செவ்விய தமிழ் வளர்த்த ... குறுந்தொகை #19

kurunthogai#19

#Rajikavithaigal
செவ்விய தமிழ் வளர்த்த
எவ்வியை இழந்து சோகம்
கவ்விய பாணர் தம்
யாழினை முறித்து - வாழ்வு
பாழென வெறுத்து..சிகை
பொன்மலர் போனதென
கண்மலர் கலங்கிய கதையாய்
புண்ணாகிப் போனதடி நெஞ்சு
வண்ணமயிலே ..பொன்னமுதே
வாசனை முல்லை சூடி
நேசன் எனைக் கட்டி வைத்த
கருங்கூந்தல் மயக்குதடி

மரமல்லி மரத்தினிலே
விரல் படாது வீணாய் போகுதடி - மனை
அருகே  மணக்குதடி தினமுன்னை
நெருங்கி வந்து சூட
மௌவலும்  மிக ஏங்குதடி
வௌவாலாய் சுற்றி மனம்
வானம் பூமி தெரியாது
கானம் மறந்த கருங்குயிலாய்
ஆனதடி ..மருதத்தான் மறுகுகிறேன்  
மோனம் கலைத்து விடு - உயிர்
தானம் கொடுத்து விடு ..

“எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்” எனத் தொடங்கும் #19.குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.


பாடியவர்: பரணர்.

சூழல்: தன் மனை விடுத்து பரத்தையிடம் சென்ற தலைவன், மீண்டும் மனம் திருந்தி தலைவியை அணுகி அவளை சமாதானப்படுத்துகிறான். அவளோ ஊடலை விடாது சினக்கிறாள். மீண்டும் மீண்டும் சமாதானம் செய்தும் அவனை அவள் ஏற்காத நிலையில் தலைவனின் கூற்றாக வரும் பாடல். தமிழ் புலவர்களை சிறப்பாக பேணிய எவ்வி என்ற சிற்றரசன் இறந்த செய்தி கேட்டு சோர்ந்து போன பாணர்கள் தங்களுக்கு முடியில்  சூடிக்கொள்ள பொன்மலர் கொடுத்து சிறப்பித்த சிற்றரசன் இறந்துபட்டானே என கலங்கி தங்கள் யாழ் எனும் இசைக்கருவிகளை முறித்து எறிந்தார் போல இவள் அன்பு இல்லாமல் என் வாழ்வு பாழாகிவிடுமோ ? எனக்கும் இவளுக்கும் உள்ள உறவுமுறை என்னாகுமோ என்று கலங்குவதாக அமைந்துள்ள பாடல்.


நன்றி (படம்) : விக்கிபீடியா
http://archives.thinakaran.lk/Vaaramanjari
நன்றி : முனைவர் பிரபாகரன்.
nallaKurunthogai.blogspot. com


எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.

சங்கப்பலகை
தமிழமுது கவிச்சாரல்  
கவியுலக
குறிஞ்சி
சங்கத் தமிழ்
கவி அகர
அமெரிக்க தமிழகம்


ஊர் உறங்கும் நேரத்துல... குறுந்தொகை #18

Kurunthogai#18

#Rajikavithaigal ( மீள் பதிவு)

ஊர் உறங்கும் நேரத்துல
யாரும் பாக்காம நீ வார
வெளஞ்ச மூங்கில்
வேலியிட்ட வேர்ப்பலா
நாலு ஒந்தோட்டத்துல - என்
மலநாட்டுக்காரா

பல நாளா உன் உசுர
நெஞ்சுல வச்சு
வஞ்சி மக எளச்சாலே

வேலியில்லா மரமாத்தான்
காலி நிலமா கெடக்காலே
ஒட்டிக்கிட்டு கிடக்குதே
உச்சியிலே அவ உசுரு
பெத்தம்  பெரிய பலா
ஒத்தக் குச்சியில
தொங்குற கணக்கா
இங்க யாருக்கு
மங்குன அவ மனசு புரியுது
பொங்குற நல்ல சேதி
எப்ப தருவியோ - என்
மலநாட்டுக்காரா

“வேரல் வேலி வேர்க்கோள் பலவின்” எனத்தொடங்கும் குறுந்தொகைப் பாடலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
எழுதியவர்: கபிலர்


சூழல்: இரவில் காதலியைச் சந்தித்துத் திரும்புகிறான் காதலன். அவனைச் சந்தித்து, காதலியை மணந்துகொள்ளுமாறு கேட்கிறாள் தோழி

நன்றி (படம்) : விக்கிபீடியா
நன்றி : முனைவர் பிரபாகரன்.
nallaKurunthogai.blogspot. com


குறுந்தொகை #18


வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.

பூ எனக் கொள்வேன் எருக்கை... குறுந்தொகை #17

kurunthogai#17

ஒற்றை எழுத்து  கொல்லுதடி

#Rajikavithaigal

பூ    எனக் கொள்வேன் எருக்கை
மா  எனக் கொள்வேன் பனையை
சீ     என ஊரும் தூற்ற
ஆ   என அயர்வேனோ?
நீ     என வாழும் என்னுயிர்
போ எனத் துரத்தலாகுமோ ?

கூ     எனக் கூவும் குயிலே..!
மை எனப் பொய் தடவி - இதயப்
பை தனை தாக்கினாயே  
தை அதை தையலே  அன்பால்  
கை  சேர்ப்போம் - என்
ஐ மிளிர் அஞ்சுகமே
கோ  என வாழ்ந்தேனே
தீ   எனச்  சுட்டாயே …
வை உன் மனதை
வா வான் போல் வாழ்வோம்


படம் (நன்றி) : wikipedia.com
தகவல் நன்றி : முனைவர்.பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com

குறுந்தொகை#17

மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே.


பாடியவர்:  பேரெயின் முறுவலார்

ஒட்டகம் மேயுற ... குறுந்தொகை #16

Kurunthogai_16 (version 1)_Ullor_kollo?

#Rajikavithaigal

ஒட்டகம் மேயுற  ...நாட்டுப்பக்கம்
கட்டு கட்டா ….துட்டு பாக்க
துணிஞ்சு போன மச்சான்

தெனம்  சிறுக்கியுந்தான்
மனம் மறுகி கெடக்கேனே
என்னய நினைச்சுத் தான்
பாப்பானோ என் ஆச மச்சான்

பனைமரம் முளைச்ச காடு
கள்ளிச்செடி நெறஞ்ச காடு - செவத்த
பல்லி சத்தம் கொடுக்கையிலே
கள்ளி உன்ன நினைப்பானே
சொல்லிகிட்டே நடந்து போனா
சுள்ளி பொறுக்குற என்
சோட்டுக்காரி.




*“உள்ளார் கொல்லோ தோழி” என்ற குறுந்தொகைப் பாடலை  அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
(பாடியவர்:பாலை பாடிய பெருங்கடுங்கோ)


பிரிந்த காதலனை எண்ணிக் காதலி வருந்துகிறாள். அவளுக்குத் தோழி சொல்லும் மறுமொழியாக இந்த பாடல் அமைந்துள்ளது.  



Kurunthogai_16 (version 2)

#Rajikavithaigal

விழி பேசி
வழி கண்டோம்
கிலி நீங்கி வாழ - பொற்
கிழி காண - கடு
வழி பாலை  கடந்தான்
மொழி பறித்த மோகனன்
பிழியும் மனதை மறந்தானோ?
தோழி நீ செப்பிடுக !

வழிப்பறி கள்வர்
கழியுடன் அம்பை பாறையில்
செழிக்கத்  தீட்டி நகத்தால்
ஒலிக்க செய்யும் ஓசையாய்
நெளிந்தோடும் செங்கால் பல்லி
களிக்கவோர் பேடை தேடியழைக்க  
வலிக்குமே  வஞ்சிக் கள்வனுக்கும்
உளியாய் நெஞ்சில் கள்ளிக்காட்டில்

*“உள்ளார் கொல்லோ தோழி” என்ற குறுந்தொகைப் பாடலை  அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
(பாடியவர்:பாலை பாடிய பெருங்கடுங்கோ)


பொருளீட்ட தன்னைப் பிரிந்த சென்ற கணவன்  தன்னை எண்ணிப் பார்ப்பானோ எனக்  வருந்தும் இளம்பெண்ணிற்கு , அவள் தோழி சொல்லும் மறுமொழியாக இந்த பாடல் அமைந்துள்ளது.  



தகவல் நன்றி : முனைவர்.பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com


குறுந்தொகை#16
உள்ளார் கொல்லோ தோழி கள்வர்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தாரே.


எங்கே என் மகள்? என... குறுந்தொகை #15

Kurunthogai #15

#Rajikavithaigal

எங்கே என் மகள்? என
எங்கும் தேடி - நொடி
தங்காது ஓடும் தாய் - நம்
நங்கையை கண்டாயோ?
பங்கத்திற்கு பயந்து
தங்கையென கருதி தம்
சுற்றத்து தோழியை வினவ

பெற்ற தாயை தேற்ற
உற்ற தோழி உடன் வந்தாள்

பறை ஒலிக்க
நிறை சங்கு நின்றொலிக்க
இறையாண்மை கொண்ட
நிறைமொழி மாந்தர்
கோசர் போல்
நேச மனமிரண்டும்
வாசமலர் சூடி
பாசமாய் பந்தம் புகுந்ததுவே

வளைநிறை கரம் கோர்த்து
சிலையழகு சின்னவள்
கழலணிந்த காளையவன் பின்னே
பழையதோர் ஆலமரத்தருகே
சேயிலை செருகிய -வெண்
வேலுடை வீரனாம்
பாலைத் தலைவனுடன்
ஆலைப் போல் தழைக்க சென்றாளே

“பறைபடப் பணிலம் ஆர்ப்ப” எனத் தொடங்கும் #15.குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

பாடியவர்: ஔவையார்.


இரு இளம் உள்ளங்களின் காதலை பெற்றவர்கள் ஏற்கவில்லை. எனவே வேறு ஊருக்கு சென்று திருமணம் என்னும் பந்தத்தில் இணைதலை “அறத்தொடு நிற்றல் “ என்கிறது தொல்காப்பியம். அதற்கு தோழியும் அவள் தாயும் உதவுகின்றனர். மகளை காணும் தாய் பதறும் போது உன் மகள் நல்ல முறையில் திருமண பந்தத்தில் இணைந்து விட்டாள் என்று கூறுவதாக அமைந்த பாடல். கோசர்கள் எனப்படும் அறநெறி தவறாத சான்றோர்கள் போல இவர்களின் அன்பும் உண்மையானது என்று தொனிக்கிறது பாடல்.




படம் (நன்றி) : wikipedia.com
tamilengalmoossu.blogspot.com
தகவல் நன்றி : முனைவர்.பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com

குறுந்தொகை#15
பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு

தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

பனை ஏறி விட்டேன் ... குறுந்தொகை #14

Kurunthogai #14
ஆணின்  நாணம்

#Rajikavithaigal

பனை ஏறி விட்டேன் ..
           மடல் வெட்டி விட
உனை மனதில் பூட்டியதால்
             மடமங்கை உடன் சேர
நினைந்து நினைந்து உருமாறி
            உடல் சோர்ந்து  ..
ஊர் சிரிக்க நின்றாலும்
            திடல் வந்து திடமாய்
தேர் இழுப்பேன் குருதியோட - சொல்
             விடம் விழுங்கி நிற்பேன்
கார்மேகம் கண்ட
             கான மயிலென இருந்தோமே
நார் மணக்கும் சரமுல்லை
            நாணும் வெண்பற்கள் ..
வேரில் பழுத்த பலா
              காணும் அமிழ்து செவ்வாய் ..
கூறும் சொற்களோ குறைவு
              மணக்கோலம் கொண்டு
ஊர் முன்னே கரம் கோர்த்து
            நானும் மிதந்து ..
ஊர்வலம் போகையிலே ..
           நாணுவேனே ..நறுமுகையே ..

“அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த” எனத் தொடங்கும் #14.குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

பாடியவர்: தொல்கபிலர்

இரு உள்ளங்கள் கலந்த பின்னர், தலைவி தாயின் கட்டுக்காவல் மற்றும் கண்டிப்பை தாண்ட முடியாது தவிக்கிறாள். அவளின் பெற்றோர்களின் சம்மதம் பெற ஆண் கடைசியாக செய்யும் யுக்தி மடலேறுவது. மடலேறுவதாக தலைவன் தெரிவிக்கிறான்.

மடலேறுவது நாணத் தகுந்த செயல் என்று கருதப்பட்டது.  தான் நாணம் இழந்தாலும்,  அவளை மணந்து மகிழ்ச்சியுடன் உடன் செல்லுகையில் அந்த நல்லவளின் கணவன் என்று சொல்வதை கேட்கும் போது நாணத்தை மீண்டும் பெறுவேன் என்பதாக பாடல் அமைந்து உள்ளது.

படம் (நன்றி) : http://www.tamilvu.org
தகவல் நன்றி : முனைவர்.பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com


அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே பெற்றாங்
கறிகதில் அம்மவிவ் வூரே மறுகில்
நல்லோள் கணவன் இவனெனப்

பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே.

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...