மூங்கிலிலே காற்றிசைக்கும் காற்றலைகள்…
*****************************************************************
காற்றிலே கலந்த கானம்
கைக்கெட்டாத கானல் நீராய் கண்ணாமூச்சியாட
மனதில் சோகம் திடமேகமாய்
வெடித்து கேவலாக
கானமின்று என்னைக் கண்டெடுக்க
கருமை..கரைந்து..
வெளிச்ச சூரியன் வெளீரென
வாரியிறைத்தது மனிதத்தின்
வழமையான மகிழ்மன மத்தாப்புக்களை
பசுமையிழந்த கொடியொன்றில்
தொற்றிக் கொண்டது ..தொலைதூர
குழலோசை ..குறுகியும் ..நீடித்தும்
காற்றின் கையசைவின் விரலாக
நீளமாய் ..நெளிந்து..வளைந்து
நெருங்கி வரும் வேணுகானம் ..
வெற்று குழலாகிய என்னுள்
நிரம்பிக் கொண்டிருக்கிறேன்
பேரின்பப் பேறோ
உயிர் நிரப்பும் வித்தையோ
கூடு விட்டு கூடு பாயும் வித்தகமோ
கானம் மிதக்கிறது..மெல்ல..
கானகமாய் மாறும் கணங்கள்
கண்ணெதிரே ..
காட்சி மாற்றத்தில்
கானகமாகிப் போகும் நானும்..
கவிதை ஆக்கம் : ராஜி வாஞ்சி
தமிழமுதுக் கவிச்சாரல் குழு